ஒரே தீர்ப்பாயம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்: பி.ஆர். பாண்டியன்
By DIN | Published On : 12th July 2019 10:18 AM | Last Updated : 12th July 2019 10:18 AM | அ+அ அ- |

நதிநீர் ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
நாடு முழுவதும் பல்வேறு ஆறுகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஒரே தீர்ப்பாயம் என்ற அறிவிப்பு பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் இறுதிப்படுத்தி, அரசிதழில் வெளியிட்டு அதன் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் நிலையில் புதிய அமைப்பு ஏன்?
இத்தீர்ப்பாயம் தமிழக நலனுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், இதற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாக்க காவலர்களைத் தேவைக்கேற்ப நியமனம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக செயல்பட்டு வரும் 1,600-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கி, நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை குறைவால் அணைகள் வறண்டு, ஒருபோக சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. நேரடி விதைப்பு செய்து வடகிழக்குப் பருவமழையைப் பயன்படுத்திதான் சாகுபடி செய்யும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உழவுசெய்ய உழவு மானியம், டீசல் மானியம், முழு மானியத்தில் விதை உள்ளிட்ட இடுபொருள்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
அப்போது, மாநில அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர், திருவாருர் மாவட்டச் செயலாளர் சேரன் ஆகியோர் உடனிருந்தனர்.