ஒற்றை நதிநீர் தீர்ப்பாயத்தில் காவிரியை உட்படுத்தக் கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் 

ஒற்றை நதிநீர் தீர்ப்பாயத்தில் காவிரியை உட்படுத்தக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஒற்றை நதிநீர் தீர்ப்பாயத்தில் காவிரியை உட்படுத்தக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: 
 இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஓடுகிற நதிகளின் நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்னைகளை நாடு தழுவிய அளவில் ஒரே தீர்ப்பாயம் அமைத்து தீர்வு காணப்படும் என முந்தைய பாஜக அரசு தனது கொள்கையாக அறிவித்திருந்தது. இதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதே எதிர்த்தது. இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சரவைக் குழு கூடி இதை அரசின் கொள்கையாக முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்ற உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
 தேசிய அளவில் மாநிலங்களின் நீர் பங்கீட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண நேரு பிரதமராக இருந்தபோது, நதிநீர் தாவா சட்டம் 1956- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சில பிரச்னைகளின் அவசியம் கருதி, துணை விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் மக்களவை கூடி காவிரி பிரச்னைக்கு நடுவர் மன்றத்தை அமைத்தது. இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை வெளியிடப்பட்டன. 
  கர்நாடகத்தின் நியாயமற்ற போக்கால், உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டு இறுதி தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியமானது தன்னாட்சி, சுய அதிகாரம் கொண்ட அமைப்பாக அமைக்காததால், எடுக்கும் முடிவை செயல்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. இதைக் காரணம் காட்டி, ஒற்றை நதிநீர் தீர்ப்பாயத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்று, இழுத்தடிக்க கர்நாடக அரசு முயற்சி எடுக்ககலாம். 
  இந்தநிலை ஏற்பட்டால், 50ஆண்டு கால போராட்டத்துக்கு முந்தைய நிலைக்கு காவிரி பிரச்னை, மீண்டும் சென்று விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, இந்த தீர்ப்பாயத்தில் காவிரிப் பிரச்னையை எக்காரணம் கொண்டும் எந்த காலத்திலும் இணைக்கக் கூடாது. ஆய்வு, விவாதம், தீர்ப்பு என காவிரி பிரச்னை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிகாரம் உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com