காவிரி நீர் கோரி 43 இடங்களில் ஆறுகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்

சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் 43 இடங்களில்

சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் 43 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவைப் பணிகள் நடைபெற வேண்டிய நேரத்தில், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், எவ்வித சாகுபடி பணியும் செய்ய முடியவில்லை.
நீதிமன்றம் உத்தரவிட்டும், தீர்ப்பின்படியும் இன்னமும் காவிரியில் கர்நாடகம் தண்ணீரை விடவில்லை. எனவே, தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தண்ணீரை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய நிர்ப்பந்தத்தைத் தராத தமிழக அரசைக் கண்டித்தும், எட்டு ஆண்டுகளாக குறுவை வருமானத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், குடிமராமத்துப் பணிகளின் மோசடியைக் கண்டறிய வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் ஜூலை 12-இல் திருவாரூர் மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு 
செய்திருந்தது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 43 இடங்களில் ஆற்றில் இறங்கி விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில இடங்களில், வெங்காயத்தாமரையும், செடி கொடிகள் மண்டிக் கிடந்ததால், ஆற்றின் கரையோரத்திலேயே ஆர்ப்பாட்டம் 
நடைபெற்றது.
திருவாரூர் பகுதியில்...
திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ். ஜெய்சங்கர், இ. செல்லமணி, வி. தர்மதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பழவனக்குடி ஓடம்போக்கி ஆற்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் கே. புலிகேசி தலைமையிலும், அலிவலம் கடுவையாற்றில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளைத் தலைவர் ஏ. பாலசுப்ரமணியன் தலைமையிலும், கூடூர் காட்டாற்றில் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி. நாகராஜன் தலைமையிலும், மாவூர் வெள்ளையாற்றில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலர் ஆர். சிவப்பிரகாசம் தலைமையிலும், கல்யாணமகாதேவி பாண்டவையாற்றில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் டி. தியாகராஜன் தலைமையிலும், மாங்குடி பாண்டவையாற்றில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலர் எம். நாகராஜன் தலைமையிலும், மருவத்தூர் பாண்டவையாற்றில் கட்சியின் ஒன்றியத் தலைவர் எஸ். செளரிராஜன் தலைமையிலும் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி பகுதியில்...
திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரச் செயலர் எம். முருகேசன், நகர முன்னாள் செயலர்கள்  டி.பி. சுந்தர், வி.முத்துக்குமரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் மகாலிங்கம், மாவட்ட மாதர் சங்கத் தலைவி தமயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலத்தம்பாடி அரிச்சந்திராநதியில் ஒன்றியத் துணைச் செயலர் பாலு தலைமையில் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலத்தில்...
ஆறுகளில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஆர்பாட்டங்களைத் தொடங்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் சிறப்புரையாற்றினார்.
நீடாமங்கலம் கோரையாற்றில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே.பாரதிமோகன் தலைமை வகித்தார்.
ஒளிமதி வெண்ணாற்றில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் எம். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றியத்தில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வலங்கைமானில்...
இதேபோல், வலங்கைமான் ஒன்றியத்தில் கொட்டையூர் சர்வமான்யம் பகுதியில் வெண்ணாற்றில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கே. சின்னராஜா தலைமையிலும், வலங்கைமான் சுள்ளானாற்றில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம். கலியபெருமாள் தலைமையிலும், வெட்டாற்றில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் எஸ்.பூசாந்திரம் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், பெண்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
பாடை கட்டி ஆர்ப்பாட்டம்...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கூத்தாநல்லூர் வட்டத்தில், 5 இடங்களில் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 வேளுக்குடி வெள்ளையாற்றில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். சதாசிவம் தலைமையில், சி.பி.ஐ. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை. அருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆற்றில் பாடை கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். 
இதேபோல், பழையனூர் வெண்ணாற்றில் மாரியப்பன் தலைமையிலும், சித்தாம்பூர் கோரையாற்றில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் கே. சந்திரசேகர் தலைமையிலும், வாழச்சேரி வெண்ணாற்றில் ஒன்றியப் பொருளாளர் முகம்மது ரபிக் தலைமையிலும், சேந்தங்குடி வெண்ணாற்றில் டாக்டர் வி.விஸ்வநாதன் தலைமையிலும் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மன்னார்குடியில்...
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடக் கோரி, மன்னார்குடி, கோட்டூரில் 14 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மன்னார்குடி நகரம் மற்றும் ஒன்றியத்ததில் மொத்தம் 5 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நகரத்தின் சார்பில், மன்னார்குடி புதுப்பாலம் பாமணியாற்றில், விவசாய சங்க நகரச் செயலர் வி.எம்.கலியபெருமாள், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நகரத் தலைவர் எம்.பி. ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் வி.கலைச்செல்வன், இளைஞர் பெருமன்ற நகரச் செயலர் சிவ.ரஞ்சித், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மன்னார்குடி ஒன்றியத்தின் சார்பில், மன்னார்குடி கீழப்பாலம் பாமணியாற்றில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமையிலும், அரிச்சந்திராநதியில் கோரையாற்றில் இறங்கி, கட்சி ஒன்றியச் செயலர் ஆர்.வீரமணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், பழையனூரில் வெண்ணாற்றிலும், வேளுக்குடியில் வெள்ளையாற்றிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கோட்டூரில்...
 கோட்டூர் ஒன்றியத்தில் மொத்தம் 9 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோட்டூரில் அடப்பாற்றில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம் தலைமை வகித்தார்.
இதேபோல் தட்டாங்கோவில் முள்ளியாறு, சேந்தங்குடியில் வெண்ணாறு, விக்கிரபாண்டியத்தில் அரிச்சந்திரா அறு, அக்கரைக்கோட்டகத்தில் சால்வனாறு, ஒரத்தூரில் கோரையாறு, பலையூரில் பாமணியாறு, நாணலூரில் கோரையாறு, கும்மட்டித்திடலில் கோரையாறு ஆகிய ஆறுகளில் இறங்கி,  விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
இதில் கட்சி ஒன்றியச் செயலர் கே.மாரிமுத்து, விவசாய சங்க ஒன்றியத் தலைவர் பரந்தாமன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் வீ.தங்கையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com