நீர் மேலாண்மை பணிகள்: ஜல்சக்தி அபியான் குழுவினர் ஆய்வு

திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள நீர் மேலாண்மை பணிகளை ஜல்சக்தி அபியான் குழுவின் கூடுதல் ஆணையர் (சிறு, குறு தொழில்துறை அமைச்சகம்) ப்யூஸ் ஸ்ரீவஸ்சதவா


திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள நீர் மேலாண்மை பணிகளை ஜல்சக்தி அபியான் குழுவின் கூடுதல் ஆணையர் (சிறு, குறு தொழில்துறை அமைச்சகம்) ப்யூஸ் ஸ்ரீவஸ்சதவா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வெட்டாற்றுப்பாலத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள், சுயஉதவிக் குழுக்கள் பங்கேற்ற நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியை, அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  
இந்த பேரணியில், நிலத்தடி நீரை பாதுகாத்தல், மழை நீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் நீர் கட்டமைப்புகளை மீள்நிரப்புதல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர்.
பேரணியில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது, கொரடாச்சேரி வெட்டாற்றுப்பாலத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. 
  பின்னர் கொரடாச்சேரி ஒன்றியம் திருகொள்ளம்பூர் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ.7 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், திருவாசல்குளத்தில் நீர் செறிவூட்டு குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, நீர் செறிவூட்டல் முறைகள், பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து திருகொள்ளம்பூர் கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1,70,000 மதிப்பில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டுள்ளதையும், நீர் மறுசுழற்சி தொட்டி கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். 
 பின்னர் திருகொள்ளம்பூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 1.7 கி.மீ தூரத்திற்கு ரூ.7,13,000 மதிப்பில் கொக்கலாடி வாய்க்கால் தூர்வாரப்படுவதையும், செல்லூர் கிராமத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் கஸ்தூரி என்ற விவசாயி ரூ.1 லட்சம் மதிப்பில் பண்ணைக் குட்டை வெட்டியுள்ளதையும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் செல்லூர் ஊராட்சியில் ரூ.31,39,000 மதிப்பில் மரக்கன்று நடவு செய்யும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதையும், எண்கண் ஊராட்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மூலம் ரூ.2.47 கோடி மதிப்பில் நீர்மூழ்கி தடுப்பணை கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதங்கள் மற்றும் பயன்பெறும் கிராமங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
 நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வலங்கைமானில்...
வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில்  நீர்நிலை மேம்பாடு தொடர்பாக மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவைச் சேர்ந்த கூடுதல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
வலங்கைமான் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்தி, நிலத்தடி நீரை பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் நீர் கட்டமைப்புகளை மீள் நிரப்புதல் உள்ளிட்டவைகள் மூலம் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவைச் சேர்ந்த கூடுதல் ஆணையர் (சிறு,குறு தொழில்துறை அமைச்சகம்) ப்யூஸ் ஸ்ரீவஸ்சதவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
வலங்கைமான் ஒன்றிய அலுவலகத்தில்  மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் வருண்குமார் என்ற விவசாயி வேளாண்மை பொறியியல்துறை மூலம் ரூ.1 லட்சம் மதிப்பில் பண்ணைக் குட்டை வெட்டியுள்ளதையும் பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அணியமங்கலம் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பாசன வாய்க்கால் தூர்வாரப்படுவதையும், இனாம்கிளியூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.70 ஆயிரம் மதிப்பில் மரக்கன்று நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். பின்னர், மரக்கன்றுகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழுவைச் சேர்ந்த கூடுதல் ஆணையர் நட்டு வைத்தார்.
  இதைத்தொடர்ந்து, மல்லிகா கிட்டப்பா என்ற விவசாயி தென்னந்தோப்பில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் அகலி வெட்டும் பணியைப் பார்வையிட்டு, நீர் செறிவூட்டல் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com