ஊராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க நடவடிக்கை தேவை
By DIN | Published On : 24th July 2019 06:33 AM | Last Updated : 24th July 2019 06:33 AM | அ+அ அ- |

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து, உடனடியாக அவற்றை மீண்டும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கே. மணிவாசன் கேட்டுக்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் தெரிவித்தது: வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் விவசாயிகள் சேர்க்கையை தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும். வேளாண் பொறியியல் துறையினர், பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக் கூறி மேலும் ஊக்குவிக்க வேண்டும். கால்நடைத்துறையினர், கால்நடைகளின் அன்றாட வளர்ச்சிகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப கால்நடை வளர்ப்பு குறித்து ஆலோசனைகளை கால்நடை வளர்ப்போருக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். சுகாதாரத்துறை மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவியானது, சரியாக பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைகிறதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பருவமழை காலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் விஷக்கடி மருந்துகள் உள்ளிட்டவைகளை இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கண்டறிந்த பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்ந்து பள்ளியில் கல்வியைத் தொடர்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதை ஆய்வு செய்து, உடனடியாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்சக்தி அபியான் திட்டத்தின் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் முன்னிலை வகித்தார். வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சிகள், பள்ளிக் கல்வித்துறை, மகளிர் திட்டம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து துறைவாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.