ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 24th July 2019 06:35 AM | Last Updated : 24th July 2019 06:35 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர், ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, திருவாரூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சுப்பிரமணியன், பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி, திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, வட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை
வகித்தார்.
இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வசந்தன் பங்கேற்று, கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். போராட்டத்தில் மாவட்டச் செயலர் செந்தில், மாவட்டப் பொருளாளர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நீடாமங்கலத்தில்...
இதேபோல், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் ப.வெற்றியழகன், சங்க வட்ட இணைச்செயலாளர் எம்.ஆர்.ரவிச்சந்திரன், சங்க நிர்வாகி கே.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம உதவியாளர்சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் கே. இளமாறன், வட்ட துணைத் தலைவர்கள் ஜி. மணிகண்டன், எம்.தென்றல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில், நீடாமங்கலம் வட்டாரத்தில் பணிபுரியும் 60 அரசு ஊழியர்களும், 20 ஊராட்சி செயலர்களும் கலந்து கொண்டனர். இதனால் அரசு அலுவல்கள் முடங்கின.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டத் தலைவர் கீர்த்திவாசன் தலைமையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வி.ஆர்.லெனின், பொருளாளர் வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.