Enable Javscript for better performance
நன்னிலம் அரசுப் பள்ளியில் விவசாயப் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நன்னிலம் அரசுப் பள்ளியில் விவசாயப் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 விவசாயப் பிரிவுக்கு  வழக்கம் போல் நிகழாண்டும் மாணவர்களை சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல் நிலைக் கல்வி தொழில் பிரிவில் விவசாயப் பாடமும் கற்பிக்கப்பட்டு வந்தது. விவசாயப் பிரிவில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இப் பிரிவு ஆசிரியர் சென்ற கல்வியாண்டில் ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக நிகழாண்டு பிளஸ் 1 வகுப்பு விவசாயப் பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து, தலைமை ஆசிரியரிடம் பொதுமக்கள் கேட்டபோது, இது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளார்.  பின்னர், நன்னிலம் பகுதி மக்களின் சார்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கல்வி அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகத்திலிருந்து இது அரசின் கொள்கை முடிவு என்று பதில் வந்துள்ளது.
    இந்நிலையில், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள், நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம் மற்றும் நன்னிலம் பாதுகாப்போம் இயக்கம் போன்ற அமைப்புகளின் சார்பாக தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளனர்.
     இதுகுறித்து, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:  விவசாயப் பிரிவு என்பது மிக முக்கியமான தொழில் கல்வி ஆகும்.  இந்த பள்ளியில் விவசாயப் பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர். இப்பள்ளியில் பல ஆண்டுகளாக விவசாயப் பிரிவு என்பது செயல்பட்டு வந்தது. 
    நிகழ் கல்வியாண்டு முதல் விவசாயப் பிரிவு ஆசிரியர் ஓய்வு பெற்று விட்டதால், விவசாயப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை என்பது நிறுத்தப்பட்டுவிட்டது. விவசாயம் சார்ந்த இப்பகுதியில் விவசாயப் பிரிவுக்கு  மேல்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்திட  அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாணவ, மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் பொறியியல் துறையை விட விவசாயப் பிரிவில் சேருவதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயப் பிரிவின் தேவையைக் கருதி மாணவர் சேர்க்கையை வழக்கம்போல் நடத்த வேண்டும். இதற்காக இப்பகுதி மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவதற்கு முடிவு செய்துள்ளோம் என்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai