Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமையுமா? மக்களின் கனவு நனவாகுமா?- Dinamani

சுடச்சுட

  

  நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமையுமா? மக்களின் கனவு நனவாகுமா?

  By DIN  |   Published on : 25th July 2019 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.
  நீடாமங்கலமானது வட்டத்தின் தலைநகர், பேரூராட்சி அந்தஸ்துடைய ஊர் என்ற சிறப்பு பெற்றது. இங்கு மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ரயில் நிலையம் உள்ளது.கேரளம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால் போன்ற ஊர்களுக்கு சென்று வரவும், ஆலங்குடி குருபகவான் கோயிலுக்கு சென்று வரவும் நீடாமங்கலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீடாமங்கலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இவை தவிர அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், இதர வாகனங்களும் நாள்தோறும் நீடாமங்கலம் வழியாகத்தான் சென்று வருகின்றன.
  சாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில், நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் இருந்தது. தற்போது அந்த இடத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நீடாமங்கலத்தில் அடிக்கடி ரயில்வே கேட்  மூடப்படும்போதெல்லாம் சாலையின் இருபுறங்களிலும் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
  பயணிகள் நிழலகம்: நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் இல்லாததால், ரயில்வே கேட்டில் காத்திருக்கும் பொதுமக்கள் படும் அவதி சொல்லி மாளாது.
  இந்த அவல நிலையைப் போக்கிட நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைத்தால், சில அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தபோது, பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தது. பேருந்து நிலையம் கட்டுவதற்கான இடத்தேர்வு பிரச்னை இருந்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பேருந்து நிலையம் இல்லாததால், போக்குவரத்து பேருந்து நிறுத்தகம் (பயணிகள் நிழலகம்) கட்டாத சூழ்நிலையிலும், பேருந்துகள் கடைவீதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் நின்று பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றிக் கொண்டும் செல்லும் நிலை உள்ளது. அதுவும் மழை, வெயில் காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
  தொலை நோக்குப் பார்வை: பெருகி வரும் மக்கள் தொகை, சாலைப் போக்குவரத்து நெருக்கடி, நீண்டதூரப் பயணம் மேற்கொள்ளும் நெடுஞ்சாலைப் பயணிகள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு, நீடாமங்கலத்தில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைவது அவசியமாகிறது. மேலும், நீடாமங்கலம் நகர் வடக்கு வீதியை ஆக்கிரமித்து நிற்கும் கார்கள், வேன்கள், ஆட்டோக்களுக்கு புதிதாக அமையும் பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி கிடைக்கும்.
  இதுகுறித்து நீடாமங்கலம் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் ப. பத்மநாபன் கூறியது:
  நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைவது மிகுந்த அவசியமானதாகும். பேருந்து நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஏற்கெனவே சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. 
  எனவே,  நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  பேரூராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ஏற்கெனவே சத்திரம் இலாகாவுக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. 
  அந்த இடம் தொடர்பாக தனியார் ஒருவருக்கும், சத்திரம் இலாகாவுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், பேருந்து நிலையம் கட்ட இயலாமல் போனது என தெரிவித்தனர்.
  நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டும் பலனில்லாத நிலை தொடர்கிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகளும், அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai