தமிழறிஞர் ஞானச்செல்வனாருக்கு கவிஞர் முத்துலிங்கம் புகழாரம்

தமிழாசிரியர்களுக்கே தமிழைக் கற்றுக்கொடுத்தவர், இன்னமும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பவர்

தமிழாசிரியர்களுக்கே தமிழைக் கற்றுக்கொடுத்தவர், இன்னமும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பவர் தமிழறிஞர் ஞானச்செல்வனார் என்று திரைப்படப் பாடலாசிரியரும், மேலவை முன்னாள் உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் புகழாரம் சூட்டினார். 
திருவாரூரில் பாரத ரத்னா காமராஜ் கல்வி அறக்கட்டளை மற்றும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஞானச்செல்வனார் முத்துவிழாவில் முத்துலிங்கம் பேசியது: பன்முகத் திறமை மிக்கவர் ஞானச்செல்வனார். தமிழாசிரியர்களுக்கு கூட தமிழைக் கற்றுக் கொடுத்தவர், இன்னமும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடியவர். அவரைப் போல இலக்கண, இலக்கியப் புலமை பெற்றவர் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழை தன் மூச்சாக கருதிக் கொண்டிருப்பவர். ஆனால், தற்போது தமிழானது பழைமையான மொழி அல்ல என்று புத்தகங்களில் சிலர் அச்சிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உலகத்திலேயே மிகப் பழைமையான மொழி தமிழ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சுமார் 6 ஆயிரம் மொழிகளில், தமிழ் மட்டுமே பழைமை மாறாமல், சங்க காலத்தில் இருந்ததுபோல, ஒலி மற்றும் உச்சரிப்பு நிலையில் மாறாமல் அப்படியே உள்ளது. உலகத்தில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூல மொழி எது என்ற ஆய்வில், தமிழே மூல மொழியாக இருக்க வேண்டும் என அமெரிக்க மொழியாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார். சங்க காலந்தொட்டே, தமிழ் தனித்து இயங்கக் கூடியதாக உள்ளது.  தற்போது, தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்து விட்டன. பதில், ஏராளம் என்பதெல்லாம் பிறமொழிச்சொற்கள் என்பது ஞானச்செல்வனார் எழுதிய புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இவரின் தமிழ்த் தொண்டுகளை போற்றும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றை, இவருக்கு வழங்க வேண்டும் என்றார் கவிஞர் முத்துலிங்கம். விழாவில் ஏற்புரையாற்றிய தமிழறிஞர் ஞானச்செல்வனார்: தமிழ்நாட்டில் வேற்றுமொழி பாடங்களைப் படிப்பவர்கள் தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டும். தமிழைப் படிக்க மறந்ததால்தான், தற்போதைய பிள்ளைகளிடம் ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டது. தமிழைப் புறக்கணித்துவிட்டு பிறமொழியைப் படிப்பதால் எவ்வித பயனும் இல்லை. துறைதோறும் தமிழை வளர்க்க பாடுபட வேண்டும். ஜாதி, மதம் உள்ளிட்டவற்றால் வேறுபட்டாலும் தமிழர் என்பதில் ஒன்றுபட்டு, தமிழ் மேம்பட பாடுபட வேண்டும்  என்றார் அவர். 
வேலுடையார் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழாசிரியர் (ஓய்வு) இரெ. சண்முகவடிவேலு, வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு) இரெ. கிள்ளிவளவன், ஏகேஎம் நிறுவனங்களின் தலைவர் பி. செந்தில், பத்திரிகையாளர் மானா. பாஸ்கரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com