முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
"பயிர்களுக்கு ரசாயன மருந்து பயன்படுத்தும்போது பாதுகாப்பு அவசியம்'
By DIN | Published On : 30th July 2019 06:59 AM | Last Updated : 30th July 2019 06:59 AM | அ+அ அ- |

பயிர்ப் பாதுகாப்புக்கு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் ரசாயன மருந்துகளை மட்டுமே தொடர்ந்து தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மருந்து தெளிப்பதற்கு முன் பூச்சிகளின் சேத நிலையை அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். மேலும் ரசாயன மருந்துகள் தெளிக்கும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறைகளை முழுமையாக பின்பற்றுவதில்லை.
இதனால் மருந்து தெளிப்பவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
மேலும் ரசாயன மருந்துகளின் சேமிப்பு மற்றும் கொள்கலன் ஒழிப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையின்றி செயல்படுவதால் பல்வேறு விபரீத விளைவுகள் உண்டாகின்றன. எனவே, ரசாயன பூச்சி மற்றும் நோய் மருந்துகளைத் தெளிக்கும்போதும் அதற்கு பின்பு கொள்கலன் ஒழிப்பு ஆகியவற்றில் முறையான வழிமுறைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுவது மிகவும் முக்கியமானதாகும். இதனால் ரசாயன மருந்துகள் தெளிக்கும் போது உண்டாகும் பல்வேறு தீய விளைவுகளுக்கு சரியான பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள்வதே இன்றியமையாத தீர்வாக அமையும் என அதில் தெரிவித்துள்ளனர்.