முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நாகை - திருவாரூர் சாலையை இணைக்கும் புறவழிச்சாலைப் பணி?
By DIN | Published On : 30th July 2019 06:58 AM | Last Updated : 30th July 2019 06:58 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடங்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்ட நாகை - திருவாரூர் புறவழிச்சாலை திட்டப் பணிகளை உடனே தொடங்கி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இந்த நகரில் புறவழிச்சாலைகள் இல்லாத நிலையில் அனைத்து வாகனங்களும் நகருக்குள் நுழைந்து திருவாரூர், மயிலாடுதுறை, மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் தினம்தோறும் போக்குவரத்து நெருக்கடியை சந்திப்பது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டபோது வேதாரண்யம் சாலையையும் நாகை சாலையில் இணைத்து புறவழிச் சாலை அமைக்கப்பட்டது.
நாகை சாலையிலிருந்து திருவாரூர் சாலையை இணைக்கும் 2.46 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளாக பிரித்து 1.30 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4.20 கோடி மதிப்பீட்டிலும், 1.16 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3.65 கோடி மதிப்பீட்டிலும் கடந்த 2.6.2010 -இல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது.
ஆனால், இந்த சாலையில் உள்ள நிலம் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமானதாகும். இந்த நிலத்துக்கு அரசின் வழிகாட்டு மதிப்பு நிர்ணயிப்பதா அல்லது சந்தை மதிப்பு நிர்ணயம் செய்வதா என்ற போராட்டத்தில் ஆண்டுகள் பல ஆகியும் தீர்வு காணப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோயில் நிர்வாகத்துக்கு பேச்சுவார்த்தையின் மூலம் 4 கோடியே 73 லட்சத்து 14 ஆயிரத்து 935 வழங்கப்பட்டது. இதற்கிடையே ஒப்பந்தப்புள்ளி எடுத்தவர்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணியைத் தொடங்காமல் விட்டு விட்டுச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.
இந்நிலையில், அதே பகுதியில் திருத்துறைப்பூண்டி - வேளாங்கண்ணி ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ரயில்வே பாதையில் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைப்பதா, கீழ்ப்பாலம் அமைப்பதா அந்த பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதா அல்லது மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்வதா அல்லது ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்வதா அல்லது தமிழக அரசும், ரயில்வே துறையும் 50 சதவீதமாக பிரித்து நிதி ஒதுக்கீடு செய்வதா என்பது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை துணைத் தலைமைப் பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் க. ஜெயந்தி உதவி பொறியாளர் ரவி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து இந்த பணிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்தபோது கடந்த 10ஆண்டுகால தாமதத்தினால் அது தற்போது நான்கு மடங்காக உயர்ந்து ரூ. 30 கோடியை எட்டி உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சாலையின் காலதாமதத்தால் திருவாரூர் - மன்னார்குடி - பட்டுக்கோட்டை சாலைகளை இணைக்கும் வட்டச் சாலை (ரிங் ரோடு) அமைக்கும் பணியும் கேள்விக்குறியாகியுள்ளது.
புறவழிச்சாலை இல்லாததால் நகரில் போக்குவரத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு மற்றும் ஒருவழிப்பாதையில் வாகனங்களை இயக்காமல் தன்னிச்சையாக இயக்கும் வாகன ஓட்டிகள், காவல்துறையினர் அனுமதித்த நேரம் தவிர்த்து எல்லா நேரங்களிலும் சரக்குகளை ஏற்றி, இறக்குதல் உளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெருக்கடி தினமும் நிலவி வருகிறது. எனவே, இந்த போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்ய நாகை - திருவாரூர் சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.