சோழங்கநல்லூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தை மூட வலியுறுத்தல்
By DIN | Published On : 30th July 2019 06:58 AM | Last Updated : 30th July 2019 06:58 AM | அ+அ அ- |

மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூர் சோழங்கநல்லூரில் அனுமதியின்றி இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோழங்கநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் அனுமதியின்றி செயல்படும் ஓன்ஜிசி நிறுவனத்தை கண்டித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு திமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் ராயர்பெர்னாண்டு தலைமை வகித்தார்.
சோழங்கநல்லூரில் அனுமதியின்றி செயல்படும் ஓஎன்ஜிசி அலுவலகத்தை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக தடை செய்து அலுவலத்தை மூடி ஓஎன்ஜிசி நிர்வாகத்தை வெளியேற்ற வேண்டும், அனுமதியின்றி கையகப்படுத்திய விவசாய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும், புழுதிக்குடி ஊராட்சியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகியவை எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது, இதற்கான 60 பேர் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் கே. மாரிமுத்து, துணைச் செயலர் எம். செந்தில்நாதன், திமுக ஊராட்சிச் செயலர் இளங்கோவன், ஊராட்சி முன்னாள் தலைவர் த. சேகர், சமூக ஆர்வலர் ச. ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.