ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம்: பி.ஆர். பாண்டியன்

ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்.

ராசிமணலில் அணை கட்டும் வரை போராடுவோம் என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்.
பூம்புகாரில் கல் எடுத்து ராசிமணல் நோக்கி காவிரிக்கு மாற்று காவிரியே என்கிற விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூர் ரயிலடிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தனர். அப்போது, சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் பேசியது:
காவிரியும், டெல்டாவும் வறண்டு கிடக்கிறது. மேட்டூர் அணையும் விரைவில் வறண்டு விடும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் உணவுக் களஞ்சியமான காவிரி டெல்டா வானம் பார்த்த பூமியாக மாறி வருவது வேதனையளிக்கிறது. எனவே, ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பான கோரிக்கை வலுவடைந்து வருகிறது. 
ராசிமணல் பகுதியில் காவிரியின் இடது கரை தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது. வலது கரை கர்நாடகத்தைச் சேர்ந்தது. ஒகேனக்கலில் இருந்து பிலிகுண்டுலு 10 கி.மீ. தொலைவிலும், அங்கிருந்து 8-வது கி.மீ. தொலைவில் ராசிமணலும் உள்ளது. ராசிமணலிலிருந்து 42 கி.மீ. தொலைவில் மேக்கேதாட்டு அமைந்துள்ளது.
ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் தண்ணீரை மேக்கேதாட்டு வரை தேக்கி வைக்க இயற்கையாகவே இரு புறமும் மலை உள்ளது. எனவே, ராசிமணலில் அணை கட்டினால் உபரி நீரைத் தேக்கி வைக்க நிறைய வாய்ப்புள்ளது.
காவிரியில் உபரி நீரைப் பொருத்தவரை தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். அதைத் தேக்கி வைக்க நமக்கு எந்தவிதச் சட்டத் தடையும் கிடையாது. எனவே, ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்ட அனுமதி இருக்கிறது. இவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தை முன்மொழிந்தவரே காமராஜர்தான். இத்திட்டத்துக்காக அங்கு 1961 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த அடிக்கல் இப்போதும் இருக்கிறது. அதன் பிறகு அரசியல் மாற்றம் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கோதாவரி - காவிரி இணைப்பால் காவிரி டெல்டாவை பாதுகாக்க முடியாது. ஏற்கெனவே கிருஷ்ணா நீரால் நமக்குப் பயனில்லை. காவிரி நீர் மூலம்தான் குடிநீர் தேவையை நிறைவு செய்யப்படுகிறது. காவிரிக்கு மாற்று காவிரியே. எனவே, ராசிமணலில் அணை கட்டியே தீருவோம். அதுவரை போராடுவோம் என்றார் பாண்டியன். சங்கத் தலைவர் த. புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), அமமுக பொருளாளர் எம். ரெங்கசாமி, வழக்குரைஞர் அ. நல்லதுரை, மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், மூத்த வேளாண் வல்லுநர் வ. பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com