ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திண்ணைப் பிரசாரம்: எம்பி பழநிமாணிக்கம் 

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினர் எஸ். பழநிமாணிக்கம் கூறினார். 
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மன்னார்குடியில் நன்றி அறிவிப்பு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசியது: 
ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என எதிர்பார்த்த என்னை, மூன்று லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளார்கள். 
மத்திய அரசை மனமாற்றம் செய்ய வேண்டிய பணி திமுக எம்பிகளிடம் உள்ளது. கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் எந்த வேறுபாடும் பார்க்காமல், ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. இதே ஒருங்கிணைப்பு வரவிருக்கின்றசட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும். 
ஜனநாயக முறைப்படி, முழுமையாக அதை பின்பற்றி தேர்தலில் எதிர்த்து நின்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சியினர் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் அதை எதிர்த்து வெற்றி கொள்ள முடியும். 
மன்னார்குடியில் சுற்றுச்சாலை, மன்னார்குடி- பட்டுக்கோட்டை ரயில் பாதை, நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் ஆகியவை அமைய விரைவான நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்காது, மக்களவையில் குரல் எழுப்புவேன் என்றார் பழநிமாணிக்கம். 
நிகழ்ச்சிக்கு, திமுக மாவட்டச் செயலாளரும், திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சித்தமல்லி நா. சோமசுந்தரம், பி. ராஜமாணிக்கம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வை. சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் வி.த. செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com