பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற 200 குழந்தைகள் சிறப்புப் பயிற்சி மையத்தில் சேர்ப்பு
By DIN | Published On : 14th June 2019 07:39 AM | Last Updated : 14th June 2019 07:39 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடைநின்ற 200 குழந்தைகள் சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் க. கலைவாணன் தெரிவித்தார்.
திருவாரூர் கெளரிசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையம் தொடக்க விழாவில் மேலும் அவர் பேசியது: திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் பிற துறைகளுடன் இணைந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 6 முதல் 14 வயதுடைய 273 பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்தது. அவர்களில் 200 குழந்தைகள் பள்ளிகளில் செயல்படும் சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட அரசு வழங்கும் அனைத்து விலையில்லா பொருள்களும் வழங்கப்படும். ஒன்றியத்துக்கு 2 சிறப்பு பயிற்சி மையங்கள் வீதம் 20 மையங்கள் தொடங்கப்பட்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற கல்வி தன்னார்வலர்கள் மூலம் இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு, ஏப்ரல் 2020 மாத இறுதியில் முறையாக பள்ளியில்
சேர்க்கப்படுவர்.
73 மாணவர்கள் நேரடியாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேவையின் அடிப்படையில் இந்த மாணவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படும். பள்ளி இடைநின்ற, புலம் பெயர்ந்த மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பொதுமக்கள் கண்டறிந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார் க. கலைவாணன்.
பின்னர், மையத்தில் சேர்ந்த 10 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இடைநின்ற குழந்தைகளின் நம்பிக்கைகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் பேசினார். பள்ளித் தலைமையாசிரியர் பிரபாவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூர் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பிருந்தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் தீபா, ஆசிரியர் பயிற்றுநர் வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.