ஹைட்ரோ கார்பன் திட்டம்: தடையை மீறி போராட்டம்: கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதித்தால், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதித்தால், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: ரயில்வே துறையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தென்னக ரயில்வே ஊழியர்கள், பணியாளர்கள் அலுவலகத்தில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மாநில மொழிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கலாம். ஆனால், தமிழகத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு தமிழ் மட்டுமே அதிகமாக தெரியும். இதுதமிழகத்தில், குறிப்பாக தென் மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியே என்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். 
தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், வருமானவரித் துறை, வங்கிகள் உள்ளிட்டவை தமிழை பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள், அந்தந்த மாநில மொழிகளை பயன்படுத்துவதே சரியானதாகும். ரயில்வே துறையின் இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால், ரயில்வேக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழகத்தில், அரசு அறிவிக்கும் திட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்கவும், போராட்டம் நடத்த, பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் இத்திட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 
தற்போது மனிதச் சங்கிலிப் போராட்டம் நீதிமன்ற உத்தரவின்பேரில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தை நாட வேண்டி வந்தால், இந்த அரசு எதற்காக தேவைப்படுகிறது என்ற சந்தேகம் வந்துவிடும். ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டங்களை தடை செய்தால், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும். இத்திட்டத்தை அனுமதித்தால், டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும். எனவே, இத்திட்டத்தை திரும்பப் பெறுவதுடன், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
கூடங்குளத்தில் ஏற்கனவே 1 மற்றும் 2 என அணு உலைகள் இருக்கும்போது, தற்போது 3 மற்றும் 4 என அணு உலைப் பூங்காங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. உலகளவில் அணு உலைகளை ஓரிடத்தில் குவியலாக வைக்கக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. விஞ்ஞான வரம்புக்கு மீறி மேலும் இரு உலைகளை வைப்பது பாதிப்பை ஏற்படுத்தும். அணுக் கழிவுகளை பாதுகாப்பாக எப்படி வைப்பது என்ற தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. அணு உலைகளுக்கு அடியிலே இவற்றை சேமித்து வைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. லட்சக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக சரிபாதி தமிழகத்தை பாதிக்கும். எனவே இந்த முயற்சிகளை அரசு கைவிட வேண்டும்.  மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி குறுவைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணைய உத்தவுரப்படி தமிழகத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகம் மறுத்து, இந்த உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டது. தமிழகத்தில் 8-ஆவது ஆண்டாக நிகழாண்டு குறுவை சாகுபடி இல்லை.  
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, ஒட்டுமொத்த கல்வியை தலைகீழாக மாற்ற முயற்சிக்கிறது. இந்த கல்விக் கொள்கை குறித்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் தங்களது ஆலோசனைகளை கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரிப் பிரச்னை, குடிநீர் வறட்சி, புதிய கல்விக் கொள்கை ஆகிய பிரச்னைகள் தமிழகத்தில் நிலவுகின்றன. எனவே, உடனடியாக சட்டப் பேரவையை கூட்டி, இப்பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.  
மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது இடதுசாரிகளுக்கு எதிரான தீர்ப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதுபோலவே பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து கட்சிக்குள் விவாதித்திருக்கிறோம். எதிர்காலத்தில் இந்த நிலைமை மாறும் என்றார் பாலகிருஷ்ணன். 
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com