தண்ணீர் பிரச்னை தீரும்வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: க. மீனாட்சிசுந்தரம்

தண்ணீர் பிரச்னை தீரும்வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற பொதுச் செயலர் க. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். 


தண்ணீர் பிரச்னை தீரும்வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற பொதுச் செயலர் க. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார். 
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் எழுபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய மன்றத்தின் ஆண்டு விழா, துணைவன் நலத்திட்ட ஆண்டு விழா, திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினருக்குப் பாராட்டு விழா, பணி நிறைவு செய்துள்ள மன்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்று மீண்ட மன்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பணி நிறைவு செய்துள்ள வட்டார கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு விழா, கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் வெற்றி பெற்ற மன்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா என எழுபெரும் விழாவாக நடைபெற்றது. 
  விழாவுக்கு ஒன்றியத் தலைவர் க. முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் க. மீனாட்சி சுந்தரம், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் பெ.இரா. இரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பேசினர்.
முன்னதாக, ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் க. மீனாட்சி சுந்தரம், செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மத்திய அரசு, மக்களிடம் திணிக்க முயன்றுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரின் கருத்துக்களை, ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, கேட்டுப் பெற வேண்டும். தில்லியில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூட்டியுள்ள மாநிலக் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், புதிய கல்வி பற்றி கருத்து தெரிவிக்க 6 மாதம் அவகாசம் கேட்டுப் பெற வேண்டும். மேலும் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்த வேண்டும். 
தமிழகத்தில் தலை விரித்தாடும் தண்ணீர்பஞ்சம், கல்வி நிலையங்களை இயங்க விடாமல் செய்துள்ளது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு தீரும் வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இதுவரை பள்ளிகளுக்கு வழங்கப்படாத பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பு நோட்டுகள், செருப்பு, சீருடை, மிதிவண்டி போன்றவற்றை உடனே வழங்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com