அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 24th June 2019 10:51 AM | Last Updated : 24th June 2019 10:51 AM | அ+அ அ- |

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தர்மசம்வர்த்தனி அம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் கோயில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு மனோரஞ்சிதம் தலவிருட்சமாக உள்ளது.
கோயிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், மஹாலெஷ்மி, ஐயப்பன், சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகிய சுவாமிகள் உள்ளன.
இக்கோயிலில் திருப்பணி முடிவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான 6 கால யாகசாலை பூஜைகள் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை பூர்ணாஹூதி, தீபாரதனையுடன் 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்றார். மேலும், சுற்று வட்டாரத்திலிருந்து திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.