நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்
By DIN | Published On : 24th June 2019 10:53 AM | Last Updated : 24th June 2019 10:53 AM | அ+அ அ- |

திருவாரூர்: நுகர்வோர் கலாசாரத்தின் தாக்கத்துக்கு ஏற்பவும் இணைய வர்த்தகம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் ஆராய்ச்சி மையத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய காலச்சூழல் மற்றும் நுகர்வோர் கலாசாரத்தின் தாக்கத்துக்கு ஏற்பவும் இணைய வர்த்தகம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும், பதப்படுத்தும் உப்பு எனக் குறிப்பிட்டு உணவுக்காக உப்பு விநியோகம் செய்வதும், போலி முகவரியிட்ட உப்பு பொட்டலத்தில் அயோடின் கலக்காமல் உப்பு வணிகம் செய்வதும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் தடுத்து, அயோடின் கலந்த உப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உணவுப் பாதுகாப்புத் துறையின் நடமாடும் ஆய்வகத்துக்கு முழுநேர ஆய்வக வேதியியலாளரை நியமனம் செய்து வாகனம் செல்லும் இடங்களில் உணவு மாதிரிகள் எடுத்து உடனடி ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தமிழக அளவில் காலியாக உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில், காலியாக உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர்ப் பிடிப்பு தன்மையை கூடுதலாக்கி எதிர்வரும் காலங்களில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மைய பெருந்தலைவர்
எஸ்.டி. அண்ணாதுரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள்: மைய பெருந்தலைவர் எஸ்.டி. அண்ணாதுரை, பொருளாளர் எஸ். நாகராஜன், பொதுச் செயலர் ஆர். ரமேஷ், துணைத்தலைவர், இணைச் செயலர்கள் 3 பேர் 2019-2022 ஆண்டுக்கு புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.