ஹைட்ரோகார்பன் திட்டம்: மண் சட்டி ஏந்திப் போராட்டம்
By DIN | Published On : 28th June 2019 08:34 AM | Last Updated : 28th June 2019 08:34 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மண் சட்டி ஏந்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க பலத்த எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 67 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளன. இதற்கு, தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தை கைவிடக் கோரி விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட தேவங்குடியை அடுத்த கற்கோயில் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்தும், கைவிட வலியுறுத்தியும், இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண் சட்டி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமையில் இப்போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.