ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இசை, நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 06th March 2019 05:31 AM | Last Updated : 06th March 2019 05:31 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி வட்டார இசை நாடக நடிகர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டமும், டி.டி. சங்கரதாஸ் சுவாமியின் குருபூஜை விழாவும், சங்கத் தலைவர் ஜி. காமராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
தீர்மானங்கள்: தமிழக அசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருது பெறுபவர்களின் பட்டியலில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இசை, நாடக நடிகர்கள் இடம்பெறவில்லை. எனவே, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நாடக நடிகர்களுக்கும் கலைமாமணி விருது வழங்க வேண்டும். நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய இலவச பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், நாடக நடிகர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுவதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
குருபூஜை: நாடக நடிகர்கள் சங்கத்தின் தந்தை என அழைக்கப்படும் டி.டி. சங்கரதாஸ் சுவாமியின் குருபூஜையையொட்டி, அவரது உருவப் படத்துக்கு, சங்க செயலாளர் தங்க. கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் முன்னாள் தலைவர் டி. தனிக்கொடி, இணைச் செயலாளர் டி.ஏ.டி.பெரமையன், செயற்குழு உறுப்பினர் பி. குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.