தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் செயல்விளக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டங்களில் காணப்படும் சுருள் வெள்ளை

திருவாரூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டங்களில் காணப்படும் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம், நீடாமங்கலம் வட்டம், கட்டக்குடி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த செயல் விளக்கத்தில் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் தலைமை வகித்துப் பேசியது: 
தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் கூட்டம் கூட்டமாக காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை உண்டாக்கும். இது வெள்ளை நிறத்தில் காணப்படுவதால் மாவுப்பூச்சி என்று விவசாயிகளால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த ஈக்களிலிருந்து வெளியேற்றப்படும் பசை போன்ற கழிவு திரவம் கீழ் காணப்படும் இலைகளின் மேல் படர்ந்து, கரும்பூசணம் வளர ஏதுவாகிறது. இதனால், தென்னை ஓலைகள் கருப்பு நிறமாகக் காட்சியளிக்கும். இந்த வெள்ளை ஈக்களானது குட்டை ரக தென்னை மரங்களையே அதிக அளவில் தாக்கி சேதத்தை உண்டாக்கும்.
இவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் சார்ந்த மருந்தான அசாடிராக்டின் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி என்ற அளவில் ஒட்டுத்திரவத்துடன கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் நன்கு படும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். இதை 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். மேலும், மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். இலைகளின் மேல் படரும் கரும்பூசணத்தை போக்குவதற்கு மைதா மாவை பசை போல் காய்ச்சி, பின்பு  அதிலிருந்து ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம்  என்ற அளவில் எடுத்து, நன்கு கரைத்தப்பின்பு அந்த கரைசலை தென்னை ஓலைகளின் கரும்பூசணம் வளர்ந்துள்ள  பகுதிகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.  
இவற்றைக் கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால், நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடும். எனவே, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்த்து, நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது முக்கியமாகும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
பின்னர், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com