"அதிமுக வேட்பாளர்கள் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவர்'

திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியிலும்,  நாகை மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக

திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியிலும்,  நாகை மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவர் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியின் சார்பில், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம், நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தாழை ம.சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி, திருவாரூர் பனகல் சாலையில் அதிமுக தேர்தல் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின்னர், அமைச்சர் ஆர். காமராஜ் செய்தியாளர்களிடம்
கூறியது:
மக்கள் விரும்புகிற வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளோம். மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் மேலாக அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ. 1,500 என்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பினரும் எங்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்கின்றனர். அதேபோல வேளாண் துறைக்கு மிகப்பெரிய பாதுகாவலனாக தற்போதைய அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது தேர்தல் அறிக்கை மூலம்
தெரிகிறது.
 இந்தத் தேர்தல் அறிக்கை அதிமுகவை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும். மீதம் உள்ள இரண்டாண்டு கால ஆட்சியில் திருவாரூர் தொகுதி மக்களுடைய அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும். நிறைவேற்றக் கூடிய வாய்ப்பும் அதிமுகவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவர் என்றார் அமைச்சர். 
விழாவில், வேட்பாளர்கள் ஆர். ஜீவானந்தம், தாழை ம. சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளான பாஜக தேர்தல் பொறுப்பாளர் வேதரத்தினம், தேமுதிக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தினகரன், பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  முன்னதாக வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் திருவாரூர் மேலவீதியில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் கோயிலில் வழிபட்டு பிரசாரத்தைத் தொடங்கினர். கேக்கரை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com