வெற்று வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது திமுக தேர்தல் அறிக்கை: அமைச்சர் ஆர். காமராஜ் குற்றச்சாட்டு
By DIN | Published On : 22nd March 2019 09:38 AM | Last Updated : 22nd March 2019 09:38 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலையொட்டிய திமுகவின் தேர்தல் அறிக்கையை வெற்று வாக்குறுதிகளைக் கொண்டு நிரப்பியுள்ளனர் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.ஆர். நடராஜன், மன்னார்குடியில் வியாழக்கிழமை, மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அமைச்சர் ஆர். காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமாகா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் என்.ஆர். நடராஜன் பாரம்பரியமிக்க குடும்ப பின்னணியைக் கொண்டவர் மட்டுமல்ல, அவர் தொகுதி முழுமைக்கும் மக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்கு பரிச்சையமானவர். இவரது சகோதரர் என்.ஆர். ரெங்கராஜன் இரண்டு முறை பட்டுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே, தஞ்சை தொகுதியில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்பதை அனைத்து பகுதியிலும் நடைபெற்று வரும் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் ஏற்பட்டுள்ள எழுச்சியே கட்டியம் கூறுவதாக உள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. நீட் தேர்வு கூடாது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நிலைப்பட்டை தான் அதிமுக அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. நீட் தேர்வு நடைபெற்று வருவது நீதிமன்ற உத்தரவினால் தானே தவிர வேறு அல்ல. நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்து வெற்றி பெறுவோம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
திமுகவின் சார்பில் தேர்தல் காலங்களில் வெளியிடப்படும் எந்த அறிக்கையிலும் உள்ள வாக்குறுதியையும் அவர்கள் எந்த காலத்தலும் நிறைவேற்றியது கிடையாது. தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலம் இல்லாத ஏழை, எளியவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என திமுகவினர் தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று வந்த பின்னர் ஒருவருக்குக் கூட அவற்றை வழங்கவில்லை. எனவே, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. இப்போது, வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வெற்று வாக்குறுதிகளைக் கொண்டு நிரப்பியுள்ளனர். எனவே, மக்கள் எப்போதும் திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பியது இல்லை. இனி நம்பபோவதும் இல்லை என்றார் அமைச்சர் காமராஜ்.
நிகழ்ச்சியின்போது, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தமாகா மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ். தினகரன், பாமக மாநில துணைப் பொதுச் செயலர் கே. பாலசுப்பிரமணியன், புதிய தமிழகம் மாவட்டச் செயலர் சதா. சதீஷ், அதிமுக ஒன்றியச் செயலர்கள் கா. தமிழ்ச்செல்வம் (மன்னார்குடி), வீ. ஜீவானந்தம் (கோட்டூர்) கோ. அரிகிருஷ்ணன்(நீடாமங்கலம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...