Enable Javscript for better performance
நடுநிலையாளர்களின் வாக்குகளைக் கவர அதிமுகவினர் பாடுபட வேண்டும்: அமைச்சர் ஆர். காமராஜ்- Dinamani

சுடச்சுட

  

  நடுநிலையாளர்களின் வாக்குகளைக் கவர அதிமுகவினர் பாடுபட வேண்டும்: அமைச்சர் ஆர். காமராஜ்

  By DIN  |   Published on : 27th March 2019 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலில் நடுநிலையாளர்களின் வாக்குகளைக் கவர அதிமுகவினர் பாடுபட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ம. சரவணனை அறிமுகம் செய்து வைத்து மேலும் பேசியது:
  தமிழகத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிகமாக கொண்ட கட்சி அதிமுக. ஜெயலலிதாவின் சாதனைகள் மற்றும் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்குளைப் பெறுவது மட்டுமன்றி, நடுநிலையாளர்களின் வாக்குகளையும் பெற கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒவ்வொரு அதிமுக தொண்டரும் செயலாற்ற வேண்டும்.
   இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் கல்விக்காக ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, மாணவர்களுக்கு இலவசச் சீருடை, பாடப்புத்தகங்கள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மடிக்கணினியை வழங்கி உலகத் தரத்துக்கு நிகரான அறிவைப் பெற, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகை செய்துள்ளார்.
  ஒரு சமுதாயம் சிறந்து விளங்க பெண் கல்வி அவசியம்.  ஓர் ஆண் கல்வி கற்றால், ஒரு குடும்பம் மட்டுமே பயனடையும். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால், அந்த சமுதாயமே பயனடையும் என்பதை உணர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகிறார்.
  எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ரூ. 25 ஆயிரம், பட்டதாரி மாணவிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ. 50 ஆயிரம், தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கி வருவதன் மூலம் பெண் கல்வி அதிகரித்து வருகிறது. 
  மேலும் விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், இல்லத்தரசிகளின் குடும்ப சுமையைப் போக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, குடும்ப அட்டைக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகின்றன. தவிர கல்விக் கடன் தள்ளுபடி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி உள்ளிட்ட நலத்திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார்.  ராமாயணத்தில் இலங்கைக்கு பாலம் அமைக்க ராமருக்கு அணில்கள் உதவியதைப் போல், இளம் வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்தும், குடும்பப் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாக்குகளும் சிதறாமலும் அனைவரும் பம்பரமாகச் சுழன்று பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர். 
  முன்னாள் அமைச்சர் கே. ஜெயபால் தலைமை வகித்தார். அதிமுக நகரச் செயலர் டி. ஜி. சண்முகசுந்தரம் வரவேற்றார். பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை சிவா, தேமுதிக மாவட்டச் செயலாளர் சண்முகராஜன், தமாகா மாவட்ட விவசாய அணிச் செயலர் சந்திரசேகரன், புதிய தமிழகம் கட்சி நிர்வாகி சதீஷ், தமமுக நிர்வாகி ரஞ்சித்குமார், அதிமுக மாவட்டத் துணைச் செயலர்கள் உ.பாலதண்டாயுதம், வழக்குரைஞர் ஆர்.கே.பி. விஸ்வநாதன், ஒன்றியச் செயலர்கள் கே. சிங்காரவேலு, ஆர்.கே.பி. நடராஜன், சேட், வி. ஜீவானந்தம், முத்துப்பேட்டை பேரூராட்சி செயலர் மங்கள் வி. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai