Enable Javscript for better performance
மன்னார்குடி: திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, திருவாரூர் திமுக மாவட்டச் செயலரும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்துப் பேசும்போது, பிரசாரத்தில், மக்களின் எழுச்சியைப் பார்க்கும்போது தஞ்சை, நாகை மக்களவைத் தொகுதியிலும், திருவாரூர் பேரவைத் தொகுதியிலும் திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது' என்றார். 
    தஞ்சை மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியது: 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். 
    இடையில் ஒரு இடைவெளி ஏற்பட்ட நிலையில், மீண்டும் வேட்பாளராக உங்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் கேட்டு வந்துள்ளேன். என்னை வெற்றி பெற செய்து, மன்னார்குடி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
     இக்கூட்டத்தில், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது. பூத் கமிட்டி ஏற்படுத்துவது. சுவர் விளம்பரம் செய்வது. வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. 
    முன்னாள் எம்எல்ஏ-க்கள் சித்தமல்லி நா.சோமசுந்தரம்,பி. ராசமாணிக்கம், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, மாநில மாணவரணி துணைச் செயலர் த. சோழராஜன், நகரச் செயலர் வீரா.கணேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் வி.த.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர்.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.திருமாறன், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலர் எஸ். காளிமுத்து, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் எல்.தீன்முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் ஏ.எம்.தமீம் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    முன்னதாக, மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மன்னை ப. நாராயணசாமி சிலைக்கு, தஞ்சை மக்களவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காந்திஜீ சாலையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தை எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா திறந்துவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai