Enable Javscript for better performance
வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பிரசாரம் மும்முரம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    இதன் ஒரு பகுதியாக குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில், குடவாசல் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு திங்கள்கிழமை கோலப் போட்டி நடத்தப்பட்டது. கோலப் போட்டியில் கர்ப்பிணியும், மாற்றுத் திறனாளியும் வாக்களிப்பது போன்று வரையப்பட்டிருந்த கோலத்துக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. அதில், கர்ப்பிணியும், மாற்றத்திறனாளியும் வாக்களிக்கும்போது நாம் வாக்களிக்காமல் இருக்கலாமா என்ற வாசகம் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மாணவிகளும், அரசு அலுவலர்களும் 100 சதவீத நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், குடவாசல் வட்டாட்சியர் டி. ஜீவானந்தம், தேர்தல் துணை வட்டாட்சியர் ஆராவமுதன், வருவாய் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவிடச்சேரி பகுதி மசூதியில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.  மண்டல துணை வட்டாட்சியர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் கணேசன் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

    கல்லூரி மாணவர்கள் பேரணி...
    திருத்துறைப்பூண்டி, மார்ச் 26: திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவர்கள் சார்பில், நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    கல்லூரி முதல்வர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி தொடங்கி வைத்தார். அரசு ஆண்கள் பள்ளியில் தொடங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, "அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை' என முழக்கமிட்டனர்.
    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கு. திலகர் செய்திருந்தார்.


    பள்ளி மாணவர்கள்...
    நீடாமங்கலம், மார்ச் 26: மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் இந்திய வரைபட வடிவில் அமர்ந்து செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மக்களவைத் தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்பினரும் நாடெங்கிலும் வாக்குப் பதிவு விழிப்புணர்வுப் பேரணிகளையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் நீலன். அசோகன் முன்னிலையில், சுமார் 600 மாணவர்கள் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இந்திய வரைபட வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி முதல்வர் ஜி. புவனேஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பார்வையிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai