Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல் தீர்ப்பின் மூலம் பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவை மீட்கலாம்: கி. வீரமணி பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல் தீர்ப்பின் மூலம் பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவை மீட்கலாம்: கி. வீரமணி பேச்சு

    By DIN  |   Published on : 28th March 2019 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் தீர்ப்பின் மூலம் மத்திய பாஜக அரசிடம் அடகு வைக்கப்பட்ட தமிழகத்தின் சுயமரியாதையை மட்டும் அல்ல, அக்கட்சியின் பிடியில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் அதிமுகவையும் மீட்கும் நிலை உருவாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். 
    மன்னார்குடியில் புதன்கிழமை, தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்தை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குக்கேட்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: கால்பந்தாட்டத்தில் விளையாடுபவர்கள் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என தெரிந்தவுடன் பந்தை உதைப்பதை விட்டுவிட்டு எதிர் வீரரின் காலை உதைப்பதுபோல், மக்களவைத் தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட பாஜக, அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரசார கூட்டங்களில் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் செய்வீர்களா? செய்வீர்களா?  என மேடைக்கு மேடை பேசி பதவிக்கு வந்தவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து தேர்தல் மேடைக்கு வருகின்றனர். அவர்களை பார்த்து சொன்னதையெல்லாம் செய்தீர்களா ? செய்தீர்களா ? என பொது மக்கள் கேட்க தயாராகிவிட்டனர். காவிரி ஆணையம், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் செலுத்தப்படும், விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும், வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலை ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதிகள் அனைத்தும் ஏட்டளவில் மட்டும் உள்ளது.  
    விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயரும் என்றார்கள். கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்து வழங்கும் தீர்ப்பின் மூலம் அதிமுக ஆட்சியால் மத்திய பாஜக அரசிடம் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சுயமரியாதையை மீட்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சி, பணிந்து கிடக்கும் அதிமுகவை, பாஜகவின் பிடியிலிருந்து மீட்டெடுக்கலாம் என்றார் வீரமணி. 
    இதில், திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் கலந்துகொண்டு வாக்குச் சேகரித்தார். கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை வகித்தார். தி.க.செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலர் துரை. சந்திரசேகரன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சித்தமல்லி ந.சோமசுந்தரம், பி. ராஜமாணிக்கம்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, மாநில மாணவரணி செயலர் த. சோழராஜன், நகரச் செயலர் வீரா. கணேசன், மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். கனகவேல், இந்தியகம்யூனிஸ்ட் நகரச் செயலர் வி. கலைச்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் எஸ்.ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலர் ரா. ரமணி, தி.க.நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai