ரயில்வே மின்மயத் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றக் கோரிக்கை
By DIN | Published On : 28th March 2019 06:15 AM | Last Updated : 28th March 2019 06:15 AM | அ+அ அ- |

ரயில்வே மின்மய திட்டங்கள் விரைந்து முடிப்பதை கைவிட்டு படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்று தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக மின்சார என்ஜின்கள் கையாண்டால் சரக்கு ரயில்களுக்கு 47 சதவீதமும், பயணிகள் ரயில்களுக்கு 50 சதவீதமும் இழுவை செலவு குறைவு.
இதனால், மின்சார என்ஜின்களை மட்டுமே இயக்கி ஆண்டுக்கு 2,800 மில்லியன் லிட்டர் டீசலையும், எரிபொருள் செலவில் ரூ. 13,000 கோடியும் மீதப்படுத்த ரயில்வே முடிவு செய்தது. இதற்காக அனைத்து பாதைகளையும் மின்சாரமயமாக்க திட்டமிட்டது. இந்திய ரயில்வே பாதையில் 388 கிலோ மீட்டர் தூரம் பிரிட்டிஷ் காலத்தில் மின் மயமாக்கப்பட்டது.
ஜெ. ராஜ் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் 1978-ஆம் ஆண்டு ரயில்வே மின்மய மத்திய அமைப்பு ( கோர் ) உருவாக்கி மின்மய திட்டங்களை ரயில்வே அமைச்சகம் படிப்படியாக நிறைவேற்ற தொடங்கியது. தொடர்ந்து, 5 ஆண்டு திட்டங்கள் மூலம் ரயில்வே பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வந்தன. கடந்த 12-ஆவது 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 8,869 கோடி மதிப்பில் 7,785 கிலோ மீட்டர் தூரம் மின்மயமாக்கப்பட்டது.
31 மார்ச் 2018 வரை இந்திய ரயில்வேயில் மின்மயமான தூரம் 3,0212 கிலோ மீட்டராகும். இதுபோக, மீதம் இருந்த தூரம் 34, 000 கிலோ மீட்டர் நூறு சதவீத ரயில்வே மின்மயத் திட்டத்திற்கு பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நடப்பு 2018-19 நிதியாண்டு 6 ஆயிரம் கிலோ மீட்டர் வரும் 2019-2020 நிதியாண்டு 7 ஆயிரம் கிலோ மீட்டர் அதற்கு அடுத்து வரும் 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகள் தலா 10,500 கிலோ மீட்டர் என மீதம் இருந்த 34,000 கிலோ மீட்டர் தூரத்தையும் மின்மயமாக்க ரயில்வே அமைச்சகம் திட்டம் வகுத்தது.
இத்திட்டத்தில், நடப்பு 2018-19 நிதியாண்டு கடந்த மார்ச் 20-ஆம் தேதி வரை 3,754 கிலோ மீட்டர்தூரம் மின்மயமாகி இருக்கிறது. தஞ்சாவூர்-காரைக்கால் இடையேயான 103 கிலோ மீட்டர் தூரமும் உள்ளிட்ட நடப்பு திட்ட இலக்கில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் பணி நிறைவடையவில்லை. வரும் நிதியாண்டுகளில் கூடுதல் பணிகளை மேற்கொண்டு நூறு சதவீத மின்மய இலக்கை ரயில்வே எட்ட இருக்கிறது.
அதே நேரம் புழக்கத்தில் உள்ள 5,868 டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்ற ரயில்வே வசம் உள்கட்டமைப்பு இல்லை. நடப்பு 2018-19 நிதியாண்டு 100 டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றும் திட்டமும் தொழில் ரீதியாக நடக்கவில்லை. எதிர்வரும் நிலைமையை சமாளிக்க 2778 மின்சார என்ஜின்களை வாங்கவோ, உற்பத்தி செய்யவோ ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது.
மின்பாதைகளை அமைத்து விட்டு டீசல் என்ஜின்களை இயக்கினால் எரிபொருள் செலவில் பல ஆயிரம் கோடி மிச்சம் சாத்தியம் இல்லை. மின்மயத்திற்கான பெரும் மூலதனம் பலனின்றி முடங்கிப் போகும். ரயில்வே மின்மயத் திட்டங்கள் விரைந்து முடிப்பதை கைவிட்டு படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...