மானாவாரியில் கேழ்வரகு சாகுபடி: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

மானாவாரியில் கேழ்வரகு சாகுபடி குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமார்,

மானாவாரியில் கேழ்வரகு சாகுபடி குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமார், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கேழ்வரகு மானாவாரிப் பயிராக  ஜூன், ஜூலை மாதங்களிலும், குளிர் காலத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் கோடைகால பயிராக ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும்  நடவு செய்யப்படுகிறது. கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ. 14 போன்ற ரகங்கள் கேழ்வரகு சாகுபடியில் பிரதானமாக உள்ளன. 
நிலத்தைப் பண்படுத்துதல்: கேழ்வரகு பயிரிடுவதற்கு முன்பாக கோடை உழவு செய்து, ஈரப்பதத்தை சேமிக்க வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இறக்கை கலப்பைக் கொண்டு உழவு செய்ய வேண்டும்.
நல்ல மகசூல் பெறுவதற்கு, ஹெக்டேருக்கு 4 முதல் 5 லட்சம் பயிர் எண்ணிக்கை அவசியம். வரிசைக்குவரிசை 22.5 - 30 செ.மீ. இடைவெளி கொடுக்கவேண்டும். ஹெக்டேருக்கு 15  முதல் 20 கிலோ விதைகள் தேவைப்படும்.
மானாவாரி பயிரில் அதிக மகசூல் பெற விதைப்புக்குப் பின்னர், தேவையானஅளவு ஈரம் இல்லாமல் இருந்தால், முளைப்புத் திறன் பாதிக்கும்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், விதை கடினமாக்குதல் முறையை பின்பற்றினால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாற்றுகளுக்கு வீரியம் உண்டாவதுடன், வறட்சியைத் தாங்கும் திறன் ஏற்படுகிறது.
விதைகளைகடினமாக்குதல்: மானாவாரி சாகுபடிக்கு விதைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். தண்ணீரை வடித்துவிட்டு, விதைகளை ஈரத்துணியில் 2 நாட்கள் கட்டிவைக்கவேண்டும். இவ்வாறு செய்தால், விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும். ஈரத் துணியிலிருந்து விதைகளைஅகற்றிய பின்னர் வறண்ட துணியில் 2 நாட்கள் நிழலில் உலரவைக்கவேண்டும். இவ்வாறு கடினமாக்கப்பட்ட விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்தவேண்டும்.
உரமிடுதல்: மானாவாரி கேழ்வரகு பயிருக்கு ஹெக்டேருக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து முறையே 40:20:20 என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 25 கிராம் அசோஸ்பைரில்லம் ப்ரேசில்லன்ஸ் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் அவமோரியைக் கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும். 
உயிர் உரங்கள்: பயிருக்குத் தேவையான உயிர் உரத்தை ஒரு கிலோவுக்கு 25 கிராம் என்றஅளவில் பயன்படுத்தவேண்டும். விதைகளில் நன்றாக ஒட்டுவதற்கு ஒட்டும் கரைசல் அவசியம். இதற்கு 250 மில்லி தண்ணீரில், 25 கிராம் வெல்லம் (அ) சர்க்கரையை கரைத்து, 5 நிமிடம் கொதிக்கவிடவேண்டும். இவ்வாறு தயாரித்தபின் குளிர வைக்கவேண்டும். பின்னர் விதைகளைப் பயன்படுத்தவேண்டும்.
நீர் மேலாண்மை: கேழ்வரகு சாகுபடிக்கு 450 முதல் 500 மி.மீ. சராசரி மழை போதுமானது. விதைத்தவுடன், செடிப்பருவம் (1-7 நாட்கள்), தழைப் பருவம் (8-20 நாட்கள்), பூக்கும் பருவம் (21-55 நாட்கள்), முதிர் பருவம் (56-120 நாட்கள்) போன்ற பருவங்களில் நீர் பாய்சுவதுஅவசியம்.
கலப்புப் பயிர்: மானாவாரி பகுதியில் கேழ்வரகுடன் பொதுவாக  துவரையை கலப்புப் பயிராக 4:1 என்ற விகிதத்தில் பயிர் செய்வதால் அதிக விளைச்சல் கிடைக்கும்.    
அறுவடை: தானியக் கதிரில் 50 சதவீதக் கதிர்கள் பழுப்பு நிறமடைந்த பிறகு அதை அறுவடைசெய்யலாம். முற்றி பழுப்பு நிறமடைந்த அனைத்துக் கதிர்களையும் அறுவடைசெய்யவேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com