முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா?
By நமது நிருபர்,திருவாரூர் | Published On : 15th May 2019 08:47 AM | Last Updated : 15th May 2019 08:47 AM | அ+அ அ- |

திருவாரூர் நகரில் பாயும் ஓடம்போக்கியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் நகரின் மையப் பகுதியில் ஓடம்போக்கியாறு பாய்கிறது. இந்த ஆற்றின் மூலம் தண்ணீர் வரும் காலங்களில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. திருவாரூர் மையப் பகுதியில் பாயும் இந்த ஆற்றின் கரையோரத்தில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் மூலம் வெளியாகும் கழிவுநீர் ஓடம்போக்கியாற்றில் சட்ட விரோதமாக கலந்து விடப்படுகிறது. தவிர, இங்கு உற்பத்தியாகும் குப்பைகளும் ஆற்றின் கரையோரம் மற்றும் ஆற்றின் உள்பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால், இந்த ஓடம்போக்கியாறு கழிவு நீர் கால்வாயாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.
தற்போது, ஓடம்போக்கியாற்றில் தண்ணீர் வரத்து இல்லாத நிலையில், ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை மக்கள் சில தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதுடன், கால்நடைகளும் பயன்பெற்று வருகின்றன. இந்த ஆற்றில் கலக்கும் கழிவுநீர் ஏற்கெனவே தேங்கி நிற்கும் நீரில் கலந்து யாரும் பயன்படுத்த முடியாத வகையில் தண்ணீரை கெடுத்து வருவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது.
குறிப்பாக, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் உள்ள உணவகங்கள், தனியார் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் பூமிக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு ஓடம்போக்கியாற்றில் கலந்து விடப்படுகிறது. இதுபோன்ற செயல் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்கு பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் தெரியப்படுத்தினாலும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில் தேங்கும் குப்பைக் கழிவுகளாலும், தேங்கி நிற்கும் கழிவுநீரில் வளரும் ஆகாயத் தாமரை மற்றும் செடிகொடிகளாலும் தண்ணீர் வரும் காலங்களில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் அமைந்து விடுகிறது. எனவே, இன்னும் ஒரு சில மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் வரவுள்ள நிலையில், இந்த ஆற்றில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்றவும், பாசனம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் நீராக உள்ளதால் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆற்றில் கழிவுநீரை கலக்கும் குடியிருப்புகள், உணவகம் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.