முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வரத்து தொடங்கியது
By DIN | Published On : 15th May 2019 08:53 AM | Last Updated : 15th May 2019 08:53 AM | அ+அ அ- |

பயணிகளை இறக்கிவிட திருவாரூர் பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் பேருந்துகள் வரத் தொடங்கின.
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு, பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்வது குறைந்தது. தேர்தல் முடிந்தபிறகு அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என
அறிவிக்கப்பட்டது.
அத்துடன் பழைய பேருந்து நிலையத்துக்கு எந்த பேருந்துகளும் செல்லாமல், ரயில்வே மேம்பாலப் பகுதியிலேயே பயணிகளை இறக்கி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தகர்கள் சார்பில் மேம்பாலப் பகுதியில் சாலை மறியல் போராட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதையடுத்து, வர்த்தகர்களுடன், திருவாரூர் கோட்டாட்சியர் முருகதாஸ் தலைமையிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தையின்படி, நாகப்பட்டினம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும் எனவும், அதே நேரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பழைய பேருந்து நிலையம் செல்லாமல் மேம்பாலப் பகுதியிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்லத் தொடங்கின.