ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த குழு அமைப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை கண்டித்து தொடர் போராட்டங்கள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்த அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சேவை அமைப்புகள் இணைந்து போராட்டக் குழுவை அமைத்துள்ளன.
 தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பூமிக்கடியிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில், முதல் பட்டியலில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்துக்குள்பட்ட திருக்களர் கிராமம் இடம்பெற்றுள்ளது. திருக்களர் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு, தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சேவை அமைப்புகள் இணைந்து கலந்தாய்வு மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு கூட்டம், திருக்களர் தேரடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ. பாரிஜாதம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் வை. சிவபுண்ணியம் பேசியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதில் இருந்து டெல்டா மாவட்டங்களில் மழைப் பொழிவு குறைந்து விட்டது. நிலத்தடி நீர் மட்டம் அடிபாதாளத்துக்கு சென்றுவிட்டது. குடிநீர் கிடைக்காமல் நகரம் முதல் குக்கிராமம் வரை பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வறட்சி காரணமாக ஆறு, குளம் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. ஆடு, மாடுகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
 இந்நிலையில், இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு துணை போகிறது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் விவசாயம் முழுமையாக பாதித்து சுற்றுசூழல் கேள்விக் குறியாக மாறிவிடும். குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டு, மக்களின் வாழ்வாதார நிலை முடங்கி, சொந்த ஊரில் வீடு, விளைநிலம் ஆகிய உடமைகளை இழந்து அகதிகளாய் வெளியேறும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்துக்காக தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எங்களின் கோரிக்கையை ஏற்காமல், திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால், லட்சக்கணக்கான மக்களை திரட்டி தடுத்து நிறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இதனால், ஏற்படும் விளைவை சந்திக்க மக்கள் தயாரக உள்ளனர். திட்டம் நடைமுறைபடுத்தப்படும் பட்டியலில் உள்ள திருக்களாரில் அமைக்கப்பட்ட போராட்டக் குழுவை போல் கருப்புகிளார், ராயநல்லூர் கிராமம் மற்றும் திட்டம் செயல்படுத்தவுள்ள 7 மாவட்டங்களில் ஊராட்சி வாரியாக கூட்டம் நடத்தி போராட்டக் குழு அமைக்கப்படும்.
 வரும் ஜூன் இறுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போல், காவல் துறையை வைத்து போராட்டத்தை நசுக்க நினைத்தால் மத்திய, மாநில அரசுகள் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் சிவபுண்ணியம்.
 கூட்டத்தில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் மாநிலச் செயலர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் கே. மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எல். சண்முகவேல், திமுக விவசாய அணி ஒன்றியச் செயலர் டி. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 38 பேர் கொண்ட போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. தலைவராக ஆர். நட ராஜன், செயலராக எஸ். ராஜேந்திரன், பொருளாளராக ஜி. சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர்களாக ஏ. பாரிஜாதம், எஸ். கஸ்தூரி, துணைச் செயலர்களாக சந்திரமோகன், பி. சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com