மணல் கடத்தல்: சாலை மறியல்
By DIN | Published On : 16th May 2019 07:29 AM | Last Updated : 16th May 2019 07:29 AM | அ+அ அ- |

கொல்லுமாங்குடி- காரைக்கால் சாலையில் மணல் கடத்தலைத் தடுக்க கோரி செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி அருகில் உள்ள குருஸ்தானம் கிராமத்தின் வழியாக ஓடும் நாட்டாற்றில் மணல் அள்ளுவதற்காக ஜேசிபி இயந்திரம் செவ்வாய்க்கிழமை இரவு நின்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், காரைக்கால்- கொல்லுமாங்குடி நெடுஞ்சாலையில் திரண்டு மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.முத்தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் கோ. ஜானகி ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, இரவு 11 மணி அளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், கொல்லுமாங்குடி- காரைக்கால் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.