வாக்கு எண்ணிக்கை: அனைத்து மேசைகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து மேசைகள் மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு

வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து மேசைகள் மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான த. ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் ஆணைய விதிமுறைகள் தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: 
 நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், எண்ணுகை முகவர்கள், எண்ணுகை அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு செல்வதற்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையத்துக்குள் செல்லிடப்பேசி, ஐ பேட், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை.
       எண்ணுகை இட முகவர்களாக நியமிக்கப்படுபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. வேட்பாளர் எண்ணுகை இட முகவர்களின் பட்டியலை, புகைப்படங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மூன்று நாள்களுக்கு முன்னதாகக் கொடுக்க வேண்டும். வாக்குகள் எண்ணுகை மையத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு மேசைக்கு ஒரு முகவர் வீதம், 14 மேசைகளுக்கு 14 முகவர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு ஒரு வேட்பாளர் அல்லது முகவர் நியமித்துக்கொள்ளலாம்.
   வாக்குகள் எண்ணப்படுவதற்குக் குறைந்தது ஒருமணி நேரத்துக்கு முன்னதாக எண்ணுகை இட முகவர்கள் தங்களது நியமனக் கடிதங்களையும் அடையாள அட்டைகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்க வேண்டும். எண்ணுகை இட முகவர் எந்த வேட்பாளரின் முகவர், அவர் கவனிக்க வேண்டிய மேசை எண் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்து மேசைகள் மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். கூட்டத்தில் நாகை சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சொக்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com