நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பம்: வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
By DIN | Published On : 18th May 2019 07:12 AM | Last Updated : 18th May 2019 07:12 AM | அ+அ அ- |

நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பம் குறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமார் மற்றும் மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள செய்திக் குறிப்பு: நெல் சாகுபடியில் நாற்றங்கால் பராமரிப்பு முக்கியஅங்கமாக கருதப்படுகிறது. நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதன் மூலம் இளம் வயதில் பாதிக்கக்கூடிய நோயிலிருந்து 40 நாள்கள் வரை பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மகசூல் இழப்பைத் தவிர்க்கமுடியும்.
நாற்றங்காலின் பரப்பு:
ஒரு ஏக்கர் நடவு செய்ய 8 சென்ட் (320 சதுர மீட்டர்) தண்ணீர் வசதியுடன் கூடிய நிலப்பரப்பு போதுமானது. விதை அளவு: ஒரு ஏக்கர் நடவு செய்திட குறுகியகால ரக விதை 24 கிலோதேவைப்படும்
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில், கார்பன்டஜிம் அல்லதுடிரைசைக்லோஜோல் கரைசல் 2 மில்லி கலந்து 10 மணிநேரம் ஊற வைத்து பின்னர் வடிகட்டவும். இம்முறையினால் இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாள்கள் வரை பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு ஊற வைத்த விதையை உடனே விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோணியில் கட்டி மூடி, 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளைகட்டிய பின்னர் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்துபின்னர் விதைக்கலாம்.
விதைப்பு: முளைகட்டிய விதையைப் பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1-2 செ.மீ. அளவு இருத்தல் நல்லது.
களையெடுத்தல்: ஏக்கருக்கு பென்டிமெத்தாலின் 1 லிட்டர் அல்லது அனிலோபோஸ் 500 மில்லி விதைத்த 8 நாள்களுக்குப் பிறகு ஈரப்பதம் இருக்கும்போது களைக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.
உரநிர்வாகம்-
8 சென்டுக்கு 400 கிலோ தொழு உரம் இட வேண்டும். கடைசி உழவின்போது 8 சென்ட் நாற்றங்காலுக்கு 16 கிலோ டிஏபி உரமோ அல்லது 6 கிலோ யூரியாவும் 48 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்து இடப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.