வாக்கு எண்ணும் பணிக்கு 729 அலுவலர்கள் நியமனம்

வாக்கு எண்ணும் பணிக்காக 729 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான த. ஆனந்த் தெரிவித்தார். 

வாக்கு எண்ணும் பணிக்காக 729 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான த. ஆனந்த் தெரிவித்தார். 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: 
நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி மே 23-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணிக்கு செல்வோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு காலை 6 மணிக்கு சென்றுவிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்லிடப்பேசி கண்டிப்பாக கொண்டு செல்லக் கூடாது.   
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கும், ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் 17 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், 17 உதவி அலுவலர்கள், 17 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 51 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காகவும், திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காகவும் மொத்தம் 357 அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மைய இதர பணிகளுக்காக 372 அலுவலர்கள் என மொத்தம் 729 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கும் வேட்பாளர் தரப்பில் ஒரு முகவர் நியமனம் செய்யப்பட்டிருப்பார். ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுமையாக கண்காணிக்கப்படும். 
இப்பயிற்சி வகுப்பை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் த. ஆனந்த்.  பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (நிலம்) பால்துரை, (தேர்தல்) அம்பாயிரநாதன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சொக்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com