Enable Javscript for better performance
கூடுதல் வருமானத்துக்கு புறக்கடை வான்கோழி வளர்ப்பு: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கூடுதல் வருமானத்துக்கு புறக்கடை வான்கோழி வளர்ப்பு: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

    By DIN  |   Published on : 20th May 2019 08:35 AM  |   அ+அ அ-   |    |  

    புறக்கடை வான்கோழி வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெறலாம் என, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ. ராஜேஷ்குமார், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்தின் ஒரு பகுதியில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு எனக் கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்டிவருகின்றனர். அந்த வகையில், புறக்கடையில் வான்கோழி வளர்ப்பு செய்து நல்ல வருமானத்தை ஈட்டலாம்.  
    புறக்கடை வளர்ப்புக்கு ஏற்ற வான்கோழியினங்கள்: அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம், பெல்ட்ஸ் வில்லி சிறிய வெள்ளை இனம் மற்றும் நந்தனம் வான்கோழி போன்ற இனங்கள் அதிக வெப்பத்தை தாங்கக்கூடியதாகவும், இறைச்சி சுத்தமாக இருப்பதாலும் வெள்ளைநிற இறகுகளுடைய வான்கோழிகள் தமிழக வேளாண் சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.
    புறக்கடை வளர்ப்பு: கிராமப் புறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதை பார்த்திருப்பீர்கள். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவைவான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமானஅளவு கிடைத்துவிடும். ஆனால், புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. 
    இதை ஈடுகட்ட கடலைப் புண்ணாக்கு அல்லது எள்ளுப் புண்ணாக்கு அல்லது சூரியகாந்திப் புண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றை தண்ணீரில் ஊறவைத்து, அத்துடன் சிறிதளவு தவிடைச் சேர்த்துக் கொள்ளலாம்.
    ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல், சிறிது சிறிதாகத் தீவனம் வைக்கவேண்டும். தண்ணீரில் ஊறவைத்து, ஓரிருநாள்கள் கழித்து அக்கலவையை தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது. பழைய, ஊறவைத்த புண்ணாக்கில் பூஞ்சக்காளான் வளர்ச்சி ஏற்படுவதால் வான்கோழிகளுக்கு இது தீங்களிக்கும்.
    இடவசதி: வீட்டைச்சுற்றி 4 சென்ட் நிலம் இருந்தால் ஒரு ஜோடி வான்கோழி வளர்ப்புக்கு போதுமானதாக இருக்கும். இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒருசிறிய அறை தேவைப்படும். அல்லது பெரிய கூடைகள் தேவைப்படும். முட்டைகளிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும்.
    நோய்த் தாக்குதல்: வான்கோழிகளுக்கு அம்மை, சளி ஆகிய நோய்கள்தான் அதிகமாகவரும். இவற்றைக் குணப்படுத்த சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள்தூள் ஆகியவற்றில் தலா 2 டிஸ்பூன் அளவு எடுத்து ஒன்றாகக் கலந்துசிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, வாரம் ஒருமுறை வான்கோழிகள் குடிக்கும் தண்ணீரில் கலந்துகொடுத்துவந்தால், இந்த நோய்கள் வராது. வசம்பு, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவற்றைத் தலா 100 கிராம் எடுத்து, அரைத்து 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வான்கோழிகள் மீது மாதம் ஒருமுறை தெளித்துவந்தால் தோல் பிரச்னைகள் வராது.
    முட்டைஉற்பத்தி: வான்கோழிகள் எட்டு மாத வயதில் பருவத்துக்கு வந்து முட்டையிட ஆரம்பிக்கும். ஒரு வான்கோழி ஆண்டுக்கு 60-லிருந்து 100 முட்டைகள் வரை விடும். வான்கோழி முட்டைகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உண்டு. வான்கோழிகள் 30 மணி நேரத்துக்கு ஒரு முறை முட்டையிடும். பொதுவாக வான்கோழிகள் அடைகாக்குவதில்லை. அதனால, இன்குபேட்டர் மூலமாக முட்டைகளைப் பொரிக்கவச்சு, குஞ்சுகளை வளர்க்கலாம். முட்டை உற்பத்தி ரெண்டாவது  ஆண்டிலிருந்து குறைய ஆரம்பிக்கும். அத்துடன், இரண்டாமாண்டு விடும் முட்டைக்கு குஞ்சு பொரிப்புத் திறனும் குறைவாத்தான்
    இருக்கும். 
    இறைச்சி: புறக்கடையில் வளர்க்கப்படும் வான்கோழிகள்சராசரியாக 6 மாதத்தில் 3 கிலோவிலிருந்து 6 கிலோ வரைஎடை வந்துவிடும். 1 கிலோ வான்கோழிக்கறியை குறைந்தபட்சம் ரூ.150 -க்கு விற்பனை செய்யமுடியும். புறக்கடையில் வான்கோழியின் வளர்ச்சியை அதிகரிக்க தினமும் காலையில் மக்காச்சோளம், தவிடு, அரிசியை கலந்துகொடுக்கலாம். 
    மதியம் கோ-4, கோ-5, சூப்பர் நேப்பியர், அரைக்கீரை, பாலக்கீரைனு பசுந்தீவனங்களைக் கொடுக்கலாம். சராசரியாக 4 கிலோ சமச்சீர் உணவுகொடுத்தால் ஒரு கிலோ எடை அதிகரிக்கும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp