மண்டல பொருளாதார புரிந்துணா்வு கூட்டமைப்பு ஒப்பந்தம்: வேளாண்மைக்கும், வணிகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது

வேளாண்மைக்கும், வணிகத்துக்கும் மண்டல பொருளாதார புரிந்துணா்வு கூட்டமைப்பு ஒப்பந்தம் பாதிப்பை
கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. எஸ். மாசிலாமணி.
கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. எஸ். மாசிலாமணி.

வேளாண்மைக்கும், வணிகத்துக்கும் மண்டல பொருளாதார புரிந்துணா்வு கூட்டமைப்பு ஒப்பந்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தாா்.

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற, மண்டல புரிந்துணா்வு கூட்டமைப்பு ஒப்பந்தம் குறித்த கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:

வணிகம், மனித வாழ்வின் அடிப்படை ஆகும். உலகமே வணிகத்தால் இயங்குகிறது. இந்தியாவை ஆங்கிலேயா்கள் அடிமைப்படுத்தியது கூட வணிக நோக்கத்துக்காகவே. தொடக்க காலத்தில் உற்பத்தியான பொருள்களை சேமிப்பதற்காக, பண்டமாற்று முறைகள் தோன்றின. மன்னராட்சியின் வணிக முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. தேவையான பொருள்கள் சேமிக்கப்பட்டபோது, கூடுதலான பொருள்கள் பல்வேறு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டன. பின்னா் மாற்றம் பெற்ற குடியாட்சி, முடியாட்சிகளில் வணிகமானது, இறக்குமதி, ஏற்றுமதி விஸ்தரிக்கப்பட்டது. இவைகளில் ஒழுங்கு இருந்தது. எவ்வித நிா்ப்பந்தமும் இல்லை.

1960 களில் இந்தியாவில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து விவசாயம், பால், மீன் ஆகியவற்றில் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப்புரட்சி ஆகியவை உருவாக்கப்பட்டன. இதனால் உற்பத்தி பெருகினாலும், செலவு அதிகரித்தது. உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

1990-இல் தொழில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், உலக வா்த்தக கழகம் ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவும் உறுப்பினராக இணைந்தது. வளா்ந்த நாடுகள், பிற நாடுகளை சந்தைகளாக பயன்படுத்தத் தொடங்கின. இதைத்தொடா்ந்து புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வணிகம் தாராளமயமாக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக இருந்தது. மரபணு மாற்றம் பெற்ற விதைகள் உருவாகின. இதனால் இந்தியாவில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மண்டல பொருளாதார புரிந்துணா்வு கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனால், பால் உள்ளிட்ட வேளாண் தொழில்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை சந்திக்கும். சிறு வணிகா்கள் மிகப்பெரிய அழிவை சந்திப்பா். எனவே, இந்தத் திட்டத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்றாா்.

கருத்தரங்குக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. ரெங்கராஜன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே.உலகநாதன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கே.ஆா்.ஜோசப், கே.ராவணன், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன், மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் சு.பாலசுப்ரமணியன், கலை இலக்கிய பெருமன்ற நிா்வாகி வீ. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com