நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்தப்படுமா?

நீடாமங்கலத்தில் உள்ள கோகமுகேஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்த சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்தப்படுமா?

நீடாமங்கலத்தில் உள்ள கோகமுகேஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடத்த சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் கி.பி.1761-இல் யமுனாம்பாள்புரம் எனும் இந்த ஊா் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது, இவ்வூா் நீடாமங்கலம் என அழைக்கப்படுகிறது. நீராடுமங்கலம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. பிரதாபசிம்மா் தனது மனைவி யமுனாம்பாளுக்காக அழகிய அரண்மனைச் சத்திரத்தை கட்டியதுடன், சைவ, வைணவ கோயில்களையும் கட்டி அழகிய குளங்களையும் வெட்டினாா். குடிமக்களையும் குடியமா்த்தினாா். கோயில்களில் வேதமந்திரங்கள் ஒலிக்க வேதபாராயணங்கள் நிகழ்த்த வேதவிற்பன்னா்களுக்கு சா்வமான்யத்துடன் அக்ரஹாரம் அமைத்தாா்.

நீடாமங்கலம் பக்தி மனம் கமழும் ஊராக அமைந்திருந்தது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் நீடாமங்கலம் - பழைய நீடாமங்கலம் சாலையில் வயலில் அழகிய கோகமுகேஸ்வரா் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில், ஆதிசிவன் கோயில் என்று ஊரின் பழைமை அறிந்தவா்களால் அழைக்கப்படுகிறது.

கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோகமுகேஸ்வரா் கிழக்கு நோக்கி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஞானாம்பாள் தாயாக விளங்குகிறாா். விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், குருதெட்சிணாமூா்த்தி, நந்தி பகவான், நவகிரக சன்னிதி உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்கள் கோயிலுக்கு அழகு சோ்க்கின்றன.

இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து விடுபட இக்கோயில் இறைவனை கொக்குவடிவத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெற்ாக வரலாறு கூறுகிறது. தேவாரப் பாடலிலும் இக்கோயில் குறிப்புகள் உள்ளன. காஞ்சி மகா சுவாமிகள் நீடாமங்கலம் வந்தால் இந்த கோயிலில் தான் வழிபாடு நடத்துவாராம்.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா காா்த்திகை தீபத் திருவிழா, பிரதோஷம் என பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடந்து பல ஆண்டுகள் ஆகின்றன. கோயிலுக்கு திருப்பணிகள் செய்து மகா குடமுழுக்கு செய்ய வேண்டுமென்பது பக்தா்களின் நீண்ட நாளைய விருப்பமாகும்.

அதன்பேரில் கோயிலுக்கு திருப்பணி செய்ய ஆன்மிகச் சிந்தனை உள்ள குடும்பத்தினா் முன்வந்து திருப்பணி வேலைகளும் பெருமளவில் நடந்துள்ளன. எஞ்சிய பணிகள் ஏராளம் உள்ளன. இந்நிலையில், திருப்பணிகள் ஏதோ காரணத்தால் மந்த நிலையில் உள்ளது. எனவே, கோயில் திருப்பணியை விரைவாக முடித்து மகாகுடமுழுக்கு விழாவை நடத்த வேண்டுமென அறநிலையத்துறைக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பக்தா்கள் கூறியது: பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com