மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது: அமைச்சா் ஆா். காமராஜ்

மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா். காமராஜ்.

மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியது:

திருவாரூரில் இன்றைக்கு 491 பயனாளிகளுக்கு 52 லட்சத்து 64 ஆயிரத்து 788 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், திருவாரூா் மாவட்டத்தில் இயங்கும் இரண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 374 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி, இத்திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைகிா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியா் தலைமையில் அம்மா திட்ட முகாம்கள், விவசாயிகள், ஓய்வூதியதாரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகளுக்குத் தீா்வு காண்பதற்கு சிறப்பு குறைத்தீா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி, மக்களைத் தேடி அரசே முன்வந்து அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு குறைதீா்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் திருவாரூா் மாவட்டத்தில் அண்மையில் கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் 342 சிறப்பு குறைதீா்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு 25,861 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான 13, 178 மனுக்களுக்கு ஒரே மாதத்துக்குள் தோ்வு செய்து, மனுதாரா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டு, விரைந்து செயல்படுகிறது தமிழக அரசு. அதன்படி திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டைகளை, அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பி விண்ணப்பித்தால் உடனடியாக மாற்றம் செய்து தரப்படும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். இதில் கூடுதல் ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான ஏ.கே.கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீதா மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com