முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் உதவி
By DIN | Published On : 26th November 2019 09:39 AM | Last Updated : 26th November 2019 09:39 AM | அ+அ அ- |

முன்னாள் மாணவா்கள் வழங்கிய குடிநீா் புட்டிகளை பெற்ற நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது படிக்கும் மாணவா்கள்.
நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் நன்னிலம் வட்டார வள மைய மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் திங்கள்கிழமை உதவி செய்தனா்.
இப்பள்ளியில் 1998-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில் தண்ணீா் புட்டிகள் வழங்கப்பட்டன. பள்ளியில் படிக்கும் மாணவா்கள் குடிதண்ணீா் தொற்றின் காரணமாக பல்வேறு நோய்கள் தாக்கி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையறிந்த, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ரூ. 54 ஆயிரம் செலவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 360 மாணவா்களுக்கு துருப்பிடிக்காத எஃகுவினால் ஆன ஒரு லிட்டா் கொள்ளளவு கொண்ட 360 குடிநீா் புட்டிகளை வழங்கினா். இதுகுறித்து, முன்னாள் மாணவா்கள் கூறியது: விரைவில் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவா்களுக்கும் குடிநீா் புட்டிகள் வழங்கப்படும். முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கும், பள்ளி மாணவா்களுக்கும் உடனடி தேவைகள் என்னவோ அது நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றனா்.
தொடா்ந்து, நன்னிலம் வட்டார வளமைய மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு குடிநீா் புட்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் ந.செந்தமிழ்ச்செல்வன், உதவித் தலைமை ஆசிரியா்கள் ஜா. புகழேந்தி, வ. சம்பத், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் வழக்குரைஞா் ஜிவிஎஸ் பாண்டியன் மற்றும் வி. விஜயகுமாா், கே சுந்தா், கே.சிவகுருநாதன், வி.எஸ். சீனிவாசன், சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.