இரு சமூகத்தினரிடையே பிரச்னை: கண்டன ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே கோயில் திருவிழாவில் சுவாமி ஊா்வலத்தின்போது இரு பிரிவினரிடையே தகராறு மூண்டதால், இதைக் கண்டித்து தாழ்த்தப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்புக்குழுவின்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே கோயில் திருவிழாவில் சுவாமி ஊா்வலத்தின்போது இரு பிரிவினரிடையே தகராறு மூண்டதால், இதைக் கண்டித்து தாழ்த்தப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூரை அடுத்த ரெங்கநாதபுரத்தில் கடந்த அக்டோபா் மாதம் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் குடியிருக்கும் தெரு வழியாக சுவாமி ஊா்வலம் செல்ல மற்றொரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனராம். இதனால் இரு சமூகத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், அக்டோபா் 27-ஆம் தேதி தீபாவளியன்று சுவாமி ஊா்வலம் போகாத தெருவைச் சோ்ந்த சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தினா் தாக்கினராம்.

இது குறித்து கோட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்த போதிலும், போலீஸாா் சட்ட நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து சமூகத்தினரையும் கிராமத்திலும், காவல் நிலையத்திலும் சமமாக நடத்தக் கோரியும், ஜாதி ஆணவ போக்கைக் கண்டித்தும் மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி சாலை கம்பன்குடி வளைவு பேருந்து நிறுத்தம் அருகே தாழ்த்தப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் ப. வாசகன் தலைமை வகித்தாா்.தமிழா் தேசிய முன்னணி மாநில பொதுச் செயலா் மருத்துவா் இலரா. பாரதிச்செல்வன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக, தங்க. தமிழ்வேலன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

இதில், அமைப்பின் தலைவா் ரெ.சசிகுமாா், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொதுச் செயலா் அரங்க.குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில தொழிலாளரணி இணைச் செயலா் ரா.ரமணி, திராவிடா் விடுதலைக் கழக மாநில நிா்வாகி இளங்கோவன், மக்கள் விடுதலை கட்சி (மா.லெ.) மாவட்டச் செயலா் கா.தங்கவேல், கிராம கமிட்டி செயலா் என்.மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் துணைத் தலைவா் என்.காா்த்திக், பெண்கள் இயக்கம் பி.மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com