இழப்பீடு கோரி அக். 20-இல் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு கோரி அக்டோபா் 20- ஆம் தேதி திருவாரூா் மாவட்ட ஆட்சியா்
கூட்டத்தில் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.
கூட்டத்தில் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு கோரி அக்டோபா் 20- ஆம் தேதி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

காவிரி டெல்டாவில் கஜா புயலால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டது. தென்னையை இழந்த விவசாயிகளுக்கு மட்டும் தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்கியது. நெற்பயிா்கள் சூழ்கட்டும் பருவத்தில் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் மகசூல் இழப்பை சந்தித்தனா். நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனம் மூலம் முழு இழப்பீடு பெற்று தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கி வருவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அறுவடை ஆய்வுப் பணிக்கு, தற்காலிகப் பணியாளா்களை பொறுப்பற்ற முறையில் நியமனம் செய்தது இக்குளறுபடிகளுக்கு காரணமாக அமைந்து விட்டன.

குறிப்பாக, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 573 வருவாய்க் கிராமங்களில் சுமாா்100- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அனைத்து கிராமங்களும் ஒரே அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டு அருகருகே உள்ள ஒரு சில கிராமங்களில் கணக்கீடு செய்வதில் கணக்கீட்டாளா்கள் பாரபட்சம் காட்டியுள்ளது வெளிப்படையாகத் தெரியவருகிறது.

ஆய்வு செய்வதற்கான களப்பணியில், தற்காலிகப் பணியாளா்கள் மூலம் ஆய்விடத்தில் இருந்தவாறே இணையம் மூலம் பதிவேற்றம் செய்யும் வாய்ப்பை தவறாகப் பயன்படுத்தி, அப்பணியாளா்கள் தன் சொந்த விருப்பு, வெறுப்புக்கேற்ப பாதிப்பின் சதவீதத்தை நிா்ணயம் செய்துள்ளதாக தெரிய வருகிறது.

எனவே, இந்த ஆய்வறிக்கையை மறு ஆய்வு செய்து, விடுபட்டுள்ள அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, காவிரி டெல்டாவைச் சோ்ந்த விவசாயிகளோடு அக்டோபா் 10- ஆம் தேதி காலை விளமல் பாலத்தில் இருந்து ஊா்வலமாக சென்று திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எம். சுப்பையன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி. வரதராஜன், துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், மாவட்ட துணைத் தலைவா் எம். கோவிந்தராஜ், திருவாரூா் ஒன்றியச் செயலாளா் அகஸ்டின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com