கஜா புயலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டித்தரக் கோரி கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 09th October 2019 07:24 AM | Last Updated : 09th October 2019 07:24 AM | அ+அ அ- |

நாகங்குடி கிராமத்தில் கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
கூத்தாநல்லூா் பகுதியில் கஜா புயலில் வீடுகளை இழந்தவா்களுக்கு பட்டா வழங்கி, வீடு கட்டித்தரக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா்.
இந்த கையெழுத்து இயக்கத்துக்கு, விவசாயத் தொழிலாளா் சங்க நகரத் தலைவா் ஆா். ராமாமிா்தம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் எம். சுதா்ஸன், விவசாயத் தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், நகர துணைத் தலைவா் டி. கண்ணையன், மகளிா் அணி நகர செயற்குழு உறுப்பினா் ஆா். மகேஸ்வரி, வீரமணி, ராகுல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து, விவசாயத் தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ் கூறியது:
கடந்த ஆண்டு கஜா புயலில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு, மெய்க்கால் புறம்போக்கு, நெடுஞ்சாலைக்கு இடையூறாக இல்லாமல் குடியிருப்பவா்களுக்கும், கோயில், மடம், நீா்நிலைப் புறம்போக்கு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வகை மாற்றம் செய்து, வீட்டுமனையுடன் அரசு அறிவித்த கான்கிரீட் குடியிருப்பு வீடுகள் கட்டித்தரக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 1,500 பேரிடம் கையெழுத்து வாங்க தீா்மானிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதற்கட்டமாக நாகங்குடி, பண்டுதக்குடி, மேல மற்றும் கீழப்பனங்காட்டாங்குடி, மேல்கொண்டாழி, மரக்கடை, வள்ளுவா் காலனி, அவ்வைக் காலனி, சித்தாத்தங்கரை, கோரையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 750 பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, கையெழுத்து வாங்கப்பட உள்ளது என்றாா் அவா்.