நேரடி நெல் விதைப்பில் "களை' மேலாண்மை

நீடாமங்கலம்: நேரடி நெல் விதைப்பில் களை மேலாண்மை குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல்
நேரடி நெல் விதைப்பில் "களை' மேலாண்மை

நீடாமங்கலம்: நேரடி நெல் விதைப்பில் களை மேலாண்மை குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆ.ராஜேஷ்குமார் மற்றும்  மு.இராமசுப்பிரமணியன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். 
இது தொடர்பாக அவர்கள் கூறியது:  திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ஏறக்குறைய 97,500 ஹெக்டேர் நேரடி நெல் விதைப்பு செய்யப்படுகிறது. 
நேரடி நெல் விதைப்பில் களைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மகசூல் இழப்பு 40 முதல் 80 சதவீதமாக உள்ளது. 
களைகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க பின்வரும் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சேற்று வயல் நேரடி விதைப்பில், களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லிகளான பிரிடிலாக்குளோர் ஒரு ஏக்கருக்கு 600 மில்லி நெல் விதைத்த 8-ஆம் நாளில் தெளிப்பதை தொடர்ந்து,  விதைத்த 40-ஆவது நாளில் ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது பென்டிமெத்தாலின் களைக் கொல்லியை ஒரு ஏக்கருக்கு 1.3 லிட்டர் நட்ட 8-ஆவது நாளில் உகந்த 
ஈரப்பதத்தில் தெளிப்பதை தொடர்ந்து,  நட்ட 45-ஆவது நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
சேற்று வயல் நேரடி விதைப்பில், உருளை விதைப்பான் மூலம் விதைத்து, கோனோ களைக் கருவி கொண்டு விதைத்த 10, 20 மற்றும் 30-ஆவது நாளில் களையெடுக்க வேண்டும். 
இரட்டை பயிர் முறையில் சேற்று வயல் நேரடி விதைப்பு நெல் மற்றும் தக்கைப் பூண்டை பயிரிடும் போது அதன் உற்பத்தி திறன் மற்றும் பொருளாதார வருவாயை மேம்படுத்த களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லியான பிரிடிலாக்குளோர் ஒரு ஏக்கருக்கு 600 மில்லி நெல் விதைத்த 8-ஆம் நாளில் தெளிப்பதை தொடர்ந்து,  கோனோ களைக் கருவி கொண்டு வரிசைகளுக்கு இடையிலும், வரிசைகளுக்கு உள்ளே கைக்களை மூலம் விதைத்த 35-ஆவது நாளில் களை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் நெல்லின் களைகளான எகினோக்ளோவா கலோனா, எகினோக்ளோவா கிரஸ்கல்லி மற்றும் பேனிகம் ரிபன்ஸ், எக்லிப்டா ஆல்பா மற்றும் மோனோகோரியா வஜினாலிஸ் போன்ற களைகளை கட்டுப்படுத்துவதுடன் அதிக தானிய மகசூல் மற்றும் அதிக நிகர லாபத்தை பெறலாம்.
பாசன மற்றும் மானாவாரி நேரடி நெல் விதைப்பில் களை முளைப்பதற்கு முன் தெளிக்க வேண்டிய களைக் கொல்லியான பிரிட்டிலாகுளோர் ஒரு ஏக்கருக்கு 600 மில்லி விதைத்த மூன்றாம் நாளிலும் அசிம்சல்பூரான் 15 கிராம் விதைத்த 20-ஆம் நாளிலும் அதனை தொடர்ந்து விதைத்த 45 நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
நெல் - நெல் - தரிசு பயிர் முறையில் தக்கைப்பூண்டு பயிரிட்டு வயலில் அமுத்தி விடுவதால் களைகளைக் கட்டுப்படுத்தலாம். இதனை தொடர்ந்து நட்ட 35-ஆவது நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.
நேரடி நெல் விதைப்பில் களைகள் முளைத்த பிறகு தெளிக்க வேண்டிய களைக் கொல்லியான நாமினி கோல்டு (பிஸ்பைரிபாக் சோடியம்) ஒரு ஏக்கருக்கு 100 மில்லி 8 - 15 ஆம் நாளில் (களைச்செடி 2 - 4 இலை பருவத்தில்) தெளிக்க வேண்டும் அல்லது ஆல்மிக்ஸ் (குளோரிமுரான் ஈத்தையில் மெட்சல்பியூரான் மீதையில்) களைக்கொல்லியை 12 கிராம் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் 20 - 35 நாள்களுக்குள் தெளிக்க வேண்டும்.
இக்களைக்கொல்லியை தெளிப்பதனால் அகன்ற இலை களைகளைக் கட்டுப்படுத்தலாம். கோரைகளைக் கட்டுப்படுத்த சாட்டர்ன் (தியோபென்கார்ப்) என்னும் களைக்கொல்லியை ஒரு ஏக்கருக்கு 600 மில்லி விதைத்த 30-ஆம் நாளில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லிகளை தெளிப்பதற்கு முன் வயலில் தக்க ஈரப்பதத்தை உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com