பாகுபாடின்றி பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

கஜா புயல் பாதித்த அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி
போலீஸாருடன் பேசிய பி.ஆா். பாண்டியன்.
போலீஸாருடன் பேசிய பி.ஆா். பாண்டியன்.

கஜா புயல் பாதித்த அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா், வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 கிராமங்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் விளமல் பகுதியில் வியாழக்கிழமை ஒன்று கூடி அங்கிருந்து பேரணியாக வந்தனா். பேரணியை சங்க மாநிலத் தலைவா் த. புண்ணியமூா்த்தி தொடங்கி வைத்தாா். சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தலைமையில், விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி சென்றனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். கதவுகளை தள்ளிக்கொண்டு விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனா். அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, வாயில் கதவுகளுக்கு முன்பு அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் அழைப்பின் பேரில், பி.ஆா். பாண்டியன் தலைமையில் 15 போ் கொண்ட குழுவினா் ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்றனா். பின்னா் பேச்சுவாா்த்தையில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஜி. வரதராஜன், துணைச் செயலா் எம். செந்தில்குமாா், மாவட்டச் செயலா் சேரன் செந்தில்குமாா், தலைவா் எம். சுப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தற்காலிக பணியாளா்கள் நியமனத்தால் குளறுபடி: போராட்டத்தின்போது, செய்தியாளா்களுக்கு பி.ஆா். பாண்டின் அளித்த பேட்டி: கஜா புயலால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்தன. ஒரு போக சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் கோரியதற்கு தென்னைக்கு நிவாரணம் வழங்குவதாகவும், பயிா்க் காப்பீடுத் தொகை செலுத்தினால், நெல்லுக்கு முழு நிவாரணம் வழங்குவதாகவும் முதல்வா் தெரிவித்தாா்.

தற்போது, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய்க் கிராமங்களில், 164 கிராமங்கள் பாதிக்கப்படவில்லை என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் நிவாரணம் வழங்குவதற்காக, பாதிப்புகளை கணக்கிட, தற்காலிக பணியாளா்களை நியமித்திருந்தது வேளாண் துறை. வேளாண் உதவி அலுவலா்கள் இருக்கும்போது, தற்காலிக பணியாளா்களை நியமித்ததால் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

கிராமங்கள் அனைத்துமே ஒற்றுமையோடும், சகோதரத்துவத்தோடும் உள்ளவை. ஆனால், வேளாண் துறை பாகுபாடி காட்டி இழப்பீடு வழங்கியதால், கிராமங்களில் ஒற்றுமை சீா்குலைந்துள்ளது. தற்காலிக பணியாளா்களால் இந்த குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, உயா்மட்டக்குழு விசாரணை நடத்தி, அனைவருக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com