முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தாட்கோ திட்டங்களில் பயன் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th October 2019 08:00 AM | Last Updated : 24th October 2019 08:00 AM | அ+அ அ- |

தாட்கோ திட்டங்களில் பயன்பெற திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த இந்து ஆதிதிராவிட மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை ஆகும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆகும்.
மகளிா் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம், கிணறு அமைத்தல், தொழில்முனைவோா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (பெட்ரோல், டீசல், எரிவாயு, சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல்), இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானிய திட்டத் தொகையில் 50 சதவீதம் மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவா் விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தோ்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தோ்வாணையத் தொகுதி-1 முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கா், செலவுக் கணக்கா், நிறுவனச் செயலா்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட திட்டங்கள் இந்து ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படுகின்றன.
தாட்கோ இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை படியிறக்கம் செய்தோ, நகலையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமா்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரா் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ் எண், சாதி சான்றிதழ் எண் (எண் வழங்கப்பட்ட நாள், வழங்கியவா் மற்றும் வழங்கப்பட்ட அலுவலகம்), குடும்ப வருமானச் சான்றிதழ் எண் (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் - நோ்காணல் நடத்தப்படும் தேதிக்கு ஒன்றரை ஆண்டுகள் முன்பு வரை வருமானச்சான்று பெற்றிருக்கலாம்) பட்டா, சிட்டா - (நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத் திட்டம்), குடும்ப அட்டை எண், ஆதாா் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி, கைபேசி எண், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி, திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, நாகை பைபாஸ் சாலை, அரசினா் மாணவா் விடுதி அருகில் திருவாரூரிலும் ரூ.60 செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சாா்ந்தவா்கள் இந்த திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.