முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பெயரளவுக்கே காரைக்குடி-திருவாரூர் ரயில் சேவை: பயணிகள் வேதனை
By நமது நிருபர் | Published On : 24th October 2019 10:08 AM | Last Updated : 24th October 2019 10:08 AM | அ+அ அ- |

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் இதுநாள்வரை "கேட் கீப்பர்கள்' நியமிக்கப்படாததால், ரயில் சேவை பெயரளவுக்கே செயல்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை-காரைக்குடி ரயில்வே வழித்தடம் 120 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. இந்த வழித்தடம் சென்னையில் இருந்து விழுப்புரம் வரையிலும், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை என மூன்று கட்டங்களாக அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் திருவாரூர்-காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டப் பணிகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்து, கடந்த ஜூன் மாதம் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
நாள்தோறும் திருவாரூரிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணியளவில் காரைக்குடி சென்றடைகிறது. மறுமார்க்கமாக காரைக்குடியில் இருந்து மதியம் 2.30}க்கு புறப்படும் ரயில் சேவை, இரவு 9.15 மணியளவில் திருவாரூரை வந்தடைகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பராமரிப்புப் பணிக்காக திருச்சி ரயில்வே பணிமனைக்கு செல்வதால், அன்றைய தினம் ரயில் சேவை இயங்காது.
திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்களில் 13 ரயில்வே கேட்கள் நிலைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கேட்களில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எட்டு கேட்களில் சிக்னல் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு முன்னாள் ராணுவத்தினர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
ஆளில்லா 47 ரயில்வே கேட்களில், ரயிலில் பயணிக்கும் "மொபைல் கேட் கீப்பர்கள்' வாயிலாக இந்த கேட்கள் திறந்து மூடப்படுவதால், அதிகப்படியான காலம் விரயமாவதோடு பயணிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
தென்னக ரயில்வேயில் முன்னாள் ராணுவத்தினரைப் பணியமர்த்தும் நோக்கில், 2,369 முன்னாள் ராணுவத்தினர் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு விரைவில் அவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், 4 ரயில்வே கேட்களில் கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிக்னல் கட்டுப்பாடு இல்லாத மீதமுள்ள 47 ரயில்வே கேட்களில் ரயில்வே ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டிய கட்டாயம் ரயில்வே துறைக்கு உள்ளது. ஆனால், உடனடியாக ரயில்வே ஊழியர்களை பணியமர்த்தி, இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை முழுமையாக செயல்படுத்த இயலாத நிலையும் நீடிக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் 370 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டபோது 60 ஊழியர்களை இந்த மார்க்கத்தில் பணியமர்த்தியிருந்தால் இப்பகுதியினருக்கு முழுமையான ரயில் சேவை கிடைத்திருக்கும். ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த யோசனையை முன்னெடுக்காமல், திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தைப் புறக்கணித்துவிட்டது.
எனவே, இந்த 47 ரயில்வே கேட்களையும் சிக்னல் கட்டுப்பாட்டுடன் கூடிய ரயில்வே கேட் ஆக மாற்றும்பட்சத்தில், முன்னாள் ராணுவத்தினரைப் பணியமர்த்தி ரயில்வே நிர்வாகம் சுமார் 10 பத்தாண்டுகளாக சென்னைக்கு நேரடி ரயில் வசதியை இழந்திருந்த சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு ரயில் சேவை அளிக்கலாம்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய போதிலும், ரயில்வே கேட் கீப்பர்களை போதுமான எண்ணிக்கையில் நியமனம் செய்யாதது, "ஆயிரம் சவரன் கொடுத்து குதிரை வாங்கியவனுக்கு 5 சவரனில் சாட்டை வாங்க முடியாதது போல்' என்கிற சொலவடையைத்தான் நினைவுபடுத்துகிறது என ரயில் உபயோகிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த 47 ரயில்வே கேட்களையும் கட்டுப்பாட்டுடன் கூடிய கேட்களாக வடிவமைத்து, முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தி சென்னையில் இருந்து காரைக்குடி, ராமேஸ்வரம், மானாமதுரை மற்றும் கொல்லம், காரைக்கால் உள்ளிட்ட தொலைதூர விரைவு ரயில்களையும், தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக்குடி மார்க்கமாக செல்லும் தென்மாவட்ட ரயில்களில் சில ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்கும் வகையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவாவது இவ்வழித்தடத்தில் ரயில் சேவையை முழுவீச்சில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.