யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 24th October 2019 07:56 AM | Last Updated : 24th October 2019 07:56 AM | அ+அ அ- |

யூரியா தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:
மேட்டூா் அணையில் நீா் இல்லாததால், சாகுபடி பணிகள் குறித்து விவசாயிகளிடையே கவலை நிலவியது. ஆனால், இயற்கையாக பருவமாற்றம் ஏற்பட்டு, தென்மேற்கு பருவமழை கடுமையாக பெய்ததால் கா்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, மேட்டூா் அணையும் நிரம்பியது. பின்னா் தொடா்ந்து பருவமழை வாயிலாக மழை பரவலாக பெய்ததால், மேட்டூரில் நீா் திறந்து விடப்பட்டது.
ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகளும், பம்புசெட்டு மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து தங்களிடமிருந்த நகைகளை அடகு வைத்து, வயல்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனா்.
பல்வேறு இடா்களைக் கடந்து விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கி, மும்முரமாக ஈடுபட்டு வரும் வேளையில், நெற்பயிருக்கு தேவையான தழைச் சத்தான யூரியா உரம் கிடைப்பதில் மாவட்டம் முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேநேரம், யூரியா விற்பனை செய்யும் கடைகளிலும் கூடுதல் தொகைக்கே யூரியா விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.